கோவை ரயில் நிலையத்தில் நிலப் பற்றாக்குறை காரணமாக விரிவாக்கப் பணிகளை மேற்கொள்வது சவாலாக இருப்பதால், வடகோவை, சிங்காநல்லூர், பீளமேடு உள்ளிட்ட துணை ரயில் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் தெரிவித்தார்.
வடகோவை ரயில் நிலையத்தில் சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால், மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, கணபதி ராஜ்குமார் உள்ளிட்டோர் புதுப்பிப்புப் பணிகளை ஆய்வு செய்தனர்.
பின்னர் கணபதி ராஜ்குமார் கூறியதாவது: கோவையில் தொடங்கி கோவையிலேயே முடிவடையும் ரயில் களை வடகோவை நிலையத்தி லிருந்து இயக்குவதற்கான கட்டமைப்புகளை ஏற்படுத்தத் திட்டமிடப் பட்டுள்ளது. இதற்காக வடகோவையில் செயல்படும் கூட்ஸ் ஷெட்டை விரைவில் இருகூர் ரயில் நிலையத்துக்கு மாற்றி, அந்த இடத்தை பயணிகள் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
மேட்டுப்பாளையம் அணுகுசாலையில் இருந்து வடகோவை ரயில் நிலையத்துக்கு பயணிகள் எளிதில் வந்து செல்ல புதிய வழித்தடம் அமைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது என்றார்.
போத்தனூர் ரயில் நிலையம் ரூ.50 கோடிக்கும் அதிகமான மதிப்பில் மறுசீரமைக்கப்பட்டு வருவதாக பன்னாலால் தெரிவித்தார். பணிகள் தொடங்கி யுள்ள நிலையில், திட்டமிட்டபடி ஒன்றரை ஆண்டுகளில் முழுமையாக நிறைவடையும் என்றும் அவர் கூறினார்.
மேலும், ரயில் நிலையங்களில் குடிநீர் விநியோகத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் உடனடியாக சரிசெய்யப் பட்டுள்ளதாகவும், தற்போது முறையாக குளோரினேஷன் செய்யப்பட்ட சுத்தமான குடிநீர் வழங்கப் படுவது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் பன்னாலால் தெரிவித்தார்.



Leave a Reply