இந்திய மாணவியர் இஸ்லாமிய அமைப்பு (GIO) சார்பில் “பெண்மையைப் போற்றுவோம்” (Embracing Femininity) என்ற தலைப்பிலான தேசிய அளவிலான விழிப்புணர்வு பிரச்சாரம் ஆகஸ்ட் மாதம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான செய்தியாளர் சந்திப்பு கோவையில் நடைபெற்றது.
மாணவிகளின் கல்வி வளர்ச்சி, முன்னேற்றம் மற்றும் நல்லொழுக்கம் கொண்ட சமூகத்தை உருவாக்குவதை முதன்மை நோக்கமாகக் கொண்டு GIO செயல்பட்டு வருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
தீவிர ஆணாதிக்கக் கட்டுப்பாடுகளுக்கும், பெண்மையின் இயல்பை இழந்து செயல்படும் நிலைக்கும் மாற்றாக, பெண்கள் தங்களது இயல்பான பெண்மையைப் போற்றி, சுயமரியாதையுடனும் சமநிலையுடனும் வாழ்வதை ஊக்குவிப்பதே இந்தப் பிரச்சாரத்தின் முக்கிய நோக்கம் என தெரிவிக்கப்பட்டது.
ஆகஸ்ட் மாதம் முழுவதும் கருத்தரங்குகள், விழிப்புணர்வு வகுப்புகள், கலைக் கண்காட்சிகள், விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆன்லைன் கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் மூலம் சமூக விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
செய்தியாளர் சந்திப்பில் GIO தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலச் செயலாளர் நுஹா மரியம், மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் ஷமீம், கோவை மாநகரச் செயலாளர் ஷஹ்னாஸ் செய்யது மற்றும் இணைச் செயலாளர் ருபானா ஆகியோர் கலந்து கொண்டு, பிரச்சாரத்தின் நோக்கங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து விளக்கினர்.



Leave a Reply