80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை பாஜக மாநகர் மாவட்டம் சார்பில் பிரமாண்ட தேசியக்கொடி பேரணி நடைபெற்றது. இதில் பாஜகவினர், பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
சாய்பாபா கோவில் பகுதியில் தொடங்கிய பேரணி, மேட்டுப்பாளையம் சாலை வழியாக சுமார் 1.5 கி.மீ. தூரம் சென்று வடகோவை சிந்தாமணி பகுதியில் நிறைவடைந்தது. பேரணியில் பங்கேற்றவர்கள் மூவர்ண தேசியக் கொடியை ஏந்தியபடி உற்சாகமாக சென்றனர்.
80 அடி நீள தேசியக்கொடியுடன் பேரணி நடத்த பாஜகவினர் திட்டமிட்டிருந்த நிலையில், மாநகர காவல்துறை அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, பாஜகவினர் உயர்நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்றதாக தெரிவிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திட்டமிட்ட 80 அடி கொடியை விட இருமடங்கு நீளமான 160 அடி தேசியக்கொடியை ஏந்தி பேரணி நடத்தப்பட்டது. பேரணி நடைபெற்ற பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், பேரணியை முன்னிட்டு அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றமும் செய்யப்பட்டது.



Leave a Reply