கோவை மண்டலத்தின் குடிநீர் ஆதாரம், தொழில் வளர்ச்சி, விவசாய மேம்பாடு மற்றும் ஏழை, எளிய மக்களின் நில உரிமை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) சார்பில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே பெருந்திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிபிஐ மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து, கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் மு.வீரபாண்டியன் உள்ளிட்ட நிர்வாகிகள் வழங்கினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் மு.வீரபாண்டியன் கூறியதாவது:
கோவை நகரின் முக்கிய குடிநீர் ஆதாரங்களான சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளை உடனடியாக தூர்வாரி, தடையின்றி குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். கொங்கு மண்டலத்தின் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்துவதுடன், விவசாயத்தை மேம்படுத்த நீண்டகாலமாக கிடப்பில் உள்ள பாண்டியாறு–புன்னம்புழா மற்றும் ஆனைமலையாறு–நல்லாறு திட்டங்களை விரைந்து செயல்படுத்த வேண்டும்.
கோவை மக்களின் நீண்டகால கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டத்தை ஒன்றிய அரசு உடனடியாக தொடங்க வேண்டும். நீலம்பூர் முதல் மதுக்கரை வரையிலான சாலையை ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்த வேண்டும். தொழில் நகரமான கோவையை மையமாகக் கொண்டு தனி ரயில்வே கோட்டம் அமைக்க வேண்டும். மேலும், பொதுமக்களின் சட்டப் போராட்டங்களை எளிதாக்கும் வகையில் கோவையில் சென்னை உயர் நீதிமன்றக் கிளை அமைக்கப்பட வேண்டும்.
தமிழகம் மற்றும் நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் முக்கிய பங்காற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு சிறப்புச் சலுகைகள் வழங்குவதுடன், அவற்றின் வளர்ச்சிக்கு கூடுதல் முன்னுரிமை அளிக்க வேண்டும்.
கோவையில் சமீப நாட்களில் கல்லூரி மாணவர் உட்பட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. இதுபோன்ற சம்பவங்கள் தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு விழுமியங்களுக்கு எதிரானவை. காவல்துறை நடவடிக்கை மட்டும் இதற்குத் தீர்வாகாது. சமூக விழிப்புணர்வு மற்றும் அறிவியல்பூர்வமான கல்வியின் மூலமே போதைப்பொருள் பயன்பாட்டை கட்டுப்படுத்த முடியும். அரசு இதில் கூடுதல் கவனம் செலுத்தி கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தமிழக–கர்நாடக எல்லையில் மாடு மேய்க்கச் சென்ற பொதுமக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கும் மு.வீரபாண்டியன் கண்டனம் தெரிவித்தார். எல்லையோரப் பகுதிகளில் வசிக்கும் ஏழை மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக எல்லைப் பகுதிகளைக் கடந்து செல்வது இயல்பானது. அவர்களை பயங்கரவாதிகளைப் போல சுட்டுக் கொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. சம்பவத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், எல்லையோர மக்களின் பாதுகாப்பையும் அரசு உறுதி செய்ய வேண்டும் என்றார்.
மேலும், காவிரி, மேகதாது மற்றும் மாநில எல்லைப் பிரச்சினைகள் தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டி அரசு கலந்தாலோசிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், மதவாத மற்றும் வகுப்புவாத சக்திகளை எதிர்க்கவும் சிபிஐ தொடர்ந்து செயல்படும். அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்தாலும், மக்கள் நலனுக்கு எதிரான நடவடிக்கைகள் அல்லது அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத நிலை ஏற்பட்டால், சிபிஐ தனது கண்டனத்தையும் எதிர்ப்பையும் தொடர்ந்து பதிவு செய்யும் என்றும் மு.வீரபாண்டியன் தெரிவித்தார்.



Leave a Reply