பயிர்க்கடன் தள்ளுபடி உள்ளிட்ட தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றவில்லை என்றும், மேகதாது அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமைகளை பாதுகாக்கத் தவறிவிட்டதாகவும் தமிழக வெற்றிக் கழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதன் ஒரு பகுதியாக கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு அதிமுக புறநகர் மத்திய மாவட்ட செயலாளர் செ.ம.வேலுச்சாமி தலைமை வகித்தார். முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், பி.ஆர்.ஜி.அருண்குமார், பொள்ளாச்சி ஜெயராமன், கே.ஆர்.ஜெயராம், சூலூர் கந்தசாமி உள்ளிட்ட நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் பேசிய செ.ம.வேலுச்சாமி, தமிழகத்தில் நடைபெறுவது ஆட்சியா அல்லது நாடகமா என்றே தெரியவில்லை என விமர்சித்தார். காவிரி நீர் பிரச்சினை, விவசாயக் கடன் தள்ளுபடி, மேகதாது அணை உள்ளிட்ட விவகாரங்களில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும் என்றும், அந்த அணைக்கு எதிராக அதிமுக தொடர்ந்து போராடி வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், கோவை மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்தும், வரி உயர்வு மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனம் தொடர்பாகவும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
பொள்ளாச்சி ஜெயராமன் பேசுகையில், விவசாயிகளுக்கு அளித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியே இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறுவதாக தெரிவித்தார். வாக்குறுதிகள் நிறைவேற்றப்படா விட்டால் விவசாயிகள் போராட்டத்தில் இறங்குவார்கள் என்றும், தவெக அரசை வீட்டுக்கு அனுப்புவதில் விவசாயிகளின் போராட்டம் முக்கிய பங்காற்றும் என்றும் கூறினார்.
மேலும், தேர்தல் வாக்குறுதிகளை நம்பியே மக்கள் வாக்களித்ததாகவும், அவற்றை நிறைவேற்றாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் செயலாகும் என்றும் அவர் விமர்சித்தார். தமிழகத்தில் தனிப்பெரும்பான்மை ஆட்சி நடைபெறவில்லை என்றும், கூட்டணி ஆதரவுடன் ஆட்சி நடைபெற்று வருவதாகவும் குற்றம்சாட்டினார்.
தொடர்ந்து, அதிமுகவை விமர்சிப்பவர்களுக்கு பதிலளித்த அவர், எம்.ஜி.ஆர். தொடங்கி, ஜெயலலிதாவால் கட்டிக் காக்கப்பட்ட அதிமுகவை உண்மையான தொண்டர்கள் தொடர்ந்து தன்மானத்துடன் பாதுகாப்பார்கள் என தெரிவித்தார்.
தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை: தவெக அரசை கண்டித்து அதிமுக ஆர்ப்பாட்டம்



Leave a Reply