தங்க நகைகளில் ரீனியம் என்ற உலோகப் பொடியைக் கலந்து கலப்படம் செய்வதாக சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவல்கள் முற்றிலும் வதந்தியானவை என்றும், தொழில்நுட்ப ரீதியாக இதுபோன்ற கலப்படம் செய்வது சாத்தியமற்றது என்றும் கோவை தங்க நகை தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவர் முத்து வெங்கட்ராம் தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது:
தங்க நகைகளில் ரீனியம் என்ற உலோகப் பொடியைக் கலந்து விற்பனை செய்வதாக வெளியாகி வரும் தகவல்களால் பொதுமக்கள் மற்றும் தங்கம் வாங்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் தேவையற்ற அச்சமும் குழப்பமும் ஏற்பட்டுள்ளது.
தங்கத்துடன் ரீனியம் போன்ற உலோகத்தைச் சேர்த்து நகைகள் தயாரிப்பதாகக் கூறப்படுவது நடைமுறையில் சாத்தியமற்றது. தங்கம் மற்றும் பிற உலோகங்களின் இயற்பியல், வேதியியல் பண்புகள், உருகும் வெப்பநிலை, கலக்கும் விகிதம் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களைக் கவனத்தில் கொண்டே நகைகள் தயாரிக்கப்படுகின்றன. குறிப்பாக, ரீனியம் அதிக உருகுநிலையைக் கொண்ட உலோகம் என்பதால், வழக்கமான தங்க நகை தயாரிப்பு முறையில் அதனைப் பொடியாகக் கலந்து நகை தயாரிப்பது எளிதானதல்ல.
தங்கத்தின் தரத்தை உறுதி செய்வதற்குப் பல்வேறு பரிசோதனை முறைகள் உள்ளன. எனவே, இதுபோன்ற ஆதாரமற்ற தகவல்களை நம்பி பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஏற்கெனவே வாங்கிய தங்க நகைகளின் தரம் குறித்து சந்தேகம் இருந்தால், அருகிலுள்ள நகைக் கடைகளுக்குச் சென்று இலவசமாகப் பரிசோதித்துக் கொள்ளலாம்.
தங்கத்தில் கலப்படம் செய்வது கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறையிடம் ஒப்படைத்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க எங்கள் சங்கம் முழு ஒத்துழைப்பு அளிக்கும்.
தங்க நகைத் தொழில் மீதும், விற்பனையாளர்கள் மீதும் பொதுமக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பாதுகாப்பது அவசியம். ஆதாரமற்ற தகவல்களைப் பரப்பி ஒட்டுமொத்த தங்க நகைத் தொழிலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது. எனவே, பொதுமக்கள் வதந்திகளை நம்பாமல் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.



Leave a Reply