தமிழக அரசின் பட்ஜெட்டில் குறுந்தொழில் துறையினரின் முக்கிய கோரிக்கைகளுக்கு அறிவிப்புகள் வெளியாகாதது ஏமாற்றம் அளிப்பதாக தமிழ்நாடு கைத்தொழில் மற்றும் குறுந்தொழில் முனைவோர் சங்க (டேக்ட்) தலைவர் ஜேம்ஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் பட்ஜெட் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், மின்சாரத் துறையில் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக தெரிவித்தார். குறிப்பாக, 40 ஆயிரம் மின்மாற்றிகளை மாற்றவும், தமிழகம் முழுவதும் சுமார் 55 லட்சம் ஸ்மார்ட் மீட்டர்களை மாற்றவும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதேபோல், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் துறைக்கு ரூ.2,145 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதையும் வரவேற்பதாக கூறினார்.
அதே நேரத்தில், தொழில் நிறுவனங்களுக்கு சுமையாக உள்ள நிலை கட்டணத்தை ரத்து செய்வது அல்லது மாற்றியமைப்பது குறித்து எந்த அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம்பெறாதது வருத்தம் அளிப்பதாக ஜேம்ஸ் தெரிவித்தார்.
மேலும், கோவை மாவட்டத்தில் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் குறுந்தொழில் பேட்டை மற்றும் தொழிற்பூங்கா அமைப்பதற்கான அறிவிப்பு வெளியாகாததும் ஏமாற்றம் அளிப்பதாக கூறினார்.
குறுந்தொழில் நிறுவனங்களுக்கு தேவையான மூலப்பொருட்கள் மற்றும் உதிரிபாகங்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால் தொழில் துறையினர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். கடந்த காலத்தில் கோவையில் செயல்பட்ட மூலப்பொருள் வங்கி மூலம் தொழில்துறையினருக்கு தேவையான பொருட்களைப் பெற முடிந்த நிலையில், தற்போது வெளிச்சந்தையில் கூடுதல் செலவில் மூலப்பொருட்களை வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஜேம்ஸ் கூறினார்.
எனவே, கோவையில் தொழிற்பூங்கா அமைத்தல், மூலப்பொருள் வங்கி ஏற்படுத்துதல், நிலை கட்டணத்தை மாற்றியமைத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்கு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.



Leave a Reply