கோவை செளரிபாளையத்தில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், நீண்ட தடைகளைத் தாண்டி ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியானது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அது எம்.ஜி.ஆர் நடித்த ‘அடிமைப்பெண்’ படத்தை நினைவூட்டுவதாகவும் கூறினார்.
பொள்ளாச்சி ஜெயராமன் மகன் பிரவீன் சில ஆண்டுகளுக்கு முன்பு கோவையிலிருந்து பெருமாநல்லூர் செல்லும் வழியில் கார் விபத்தில் சிக்கியதாகவும், விபத்துக்குப் பிறகு அவர் அங்கிருந்து தப்பிச் சென்று இரண்டு நாட்கள் கழித்து காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் புகழேந்தி தெரிவித்தார். அந்த விபத்தில் ஒரு பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியதாகவும், அது சாதாரண விபத்தல்ல; கொலை எனக் கருதி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டதாகவும் கூறினார். தற்போது நீதிமன்றம் மறு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், சம்பவம் நடைபெற்ற காலத்தில் பொள்ளாச்சி ஜெயராமன் துணை சபாநாயகராக இருந்ததால், அவரது மகன் காவல் நிலையத்திலிருந்து சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டதாகவும், முறையான விசாரணை நடைபெறவில்லை என்றும் புகழேந்தி குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் பெண்களை திரட்டி மாபெரும் போராட்டம் நடத்த உள்ளதாகவும் அவர் அறிவித்தார்.
அரசியல் தொடர்பான கேள்விகளுக்கும் பதிலளித்த புகழேந்தி, பொள்ளாச்சி ஜெயராமன் தவெகவில் இணைவோரைக் குறித்து தொடர்ந்து விமர்சனம் செய்து வருவதாக கூறினார். முதல்வர் விஜயை குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படும் திமுக எம்.எல்.ஏ மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாகவும், இதேபோல் பிற அரசியல் தலைவர்களும் விமர்சன பேச்சுகளைத் திரும்பப் பெறாவிட்டால் வழக்கு தொடரப்படும் என எச்சரித்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சுற்றியுள்ள சில நிர்வாகிகள் கட்சியை அழிவு பாதைக்கு கொண்டு சென்று விட்டதாகவும், குறிப்பாக பொள்ளாச்சி ஜெயராமன், கே.பி. முனுசாமி உள்ளிட்டோரின் செயல்பாடுகளை விமர்சித்தார். மேலும், எஸ்.பி. வேலுமணி அதிமுகவின் தலைமையை ஏற்று கட்சியை வழிநடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள் மற்றும் எம்.எல்.ஏக்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து கேட்கப்பட்டபோது, அவர்கள் நீதிமன்றத்தில் தங்களை குற்றமற்றவர்கள் என நிரூபிக்க வேண்டும் என்றும், குற்றச்சாட்டுகள் உறுதியானால் முதல்வர் விஜய் அவர்களை கட்சியில் இருந்து நீக்குவார் என்றும் புகழேந்தி கூறினார்.
டெல்லியில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த அவர், ராகுல் காந்தி கைது செய்யப்பட்டதற்கு முதல்வர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார் என்றும், ஊழலுக்கு முதல்வர் துணை போகமாட்டார் என்றும் கூறினார்.



Leave a Reply