ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை – ரெடிங்டன் அறக்கட்டளை இணைந்து ரத்ததான முகாம்

Spread the love

சமூகப் பொறுப்புணர்வு மற்றும் தன்னார்வ சேவையை ஊக்குவிக்கும் வகையில், ரெடிங்டன் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை இணைந்து இரண்டாவது ஆண்டாக ரத்ததான முகாமை கோவையில் வெற்றிகரமாக நடத்தின.
இந்த முகாமில் ரெடிங்டன் நிறுவன ஊழியர்கள், சேனல் பார்ட்னர்கள் மற்றும் விற்பனையாளர் பிரதிநிதிகள் ஆர்வமுடன் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். நோயாளிகளுக்கு தேவையான பாதுகாப்பான ரத்தம் தொடர்ந்து கிடைப்பதை உறுதி செய்வதே முகாமின் முக்கிய நோக்கமாகும்.
நிகழ்ச்சியில் எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் எஸ். நரேந்திரன் பங்கேற்று ரெடிங்டன் அறக்கட்டளையின் சமூகப் பணிகளை பாராட்டினார்.
மேலும், எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளையின் தலைமை நிர்வாக அதிகாரி சி.வி. ராம்குமார், அறுவை சிகிச்சை, புற்றுநோய் சிகிச்சை, உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை உள்ளிட்ட மருத்துவத் தேவைகளுக்கு போதுமான ரத்தம் இருப்பது அவசியம் என வலியுறுத்தினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எஸ். அழகப்பன் மற்றும் ரத்தவியல் நிபுணர் டாக்டர் ஸ்ரீதர் கோபால் ஆகியோர் பங்கேற்று, ஒரு யூனிட் ரத்தம் பல உயிர்களைக் காப்பாற்றும் என்பதால் அனைவரும் தொடர்ந்து தன்னார்வ ரத்ததானம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினர்.
நிகழ்ச்சியின் நிறைவில் ரெடிங்டன் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் சீதா துருவா நன்றி தெரிவித்தார். தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக நடைபெற்ற இந்த ரத்ததான முகாம், சமூக நலன் மற்றும் மனிதநேய சேவையில் இரு அமைப்புகளின் அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியது.