நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி கோவை ஆட்சியர் அலுவலகம் முன்பு ​DYFI மற்றும் SFI அமைப்பினர் ஆர்ப்பாட்டம்

Spread the love

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும், டெல்லியில் மாணவர்கள் மீது போலீசார் நடத்தியதாகக் கூறப்படும் நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையிலும் DYFI மற்றும் SFI​ அமைப்பினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி திடீர் கண்டன பேரணியாகச் சென்றனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பின்னர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள B​SNL அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து, மத்திய அரசுக்கு எதிராகவும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய போராட்ட அமைப்பினர், கடந்த ஜூன் 23-ஆம் தேதி முதல் ஒன்றிய கல்வி அமைச்சரின் இல்லம் முன்பு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்களை டெல்லி போலீசார் தாக்கி கைது செய்ததாக குற்றம்சாட்டினர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதாகவும் தெரிவித்தனர்.

மேலும், மாணவர்களின் போராட்டத்திற்கு அரசியல் மற்றும் நிர்வாக ரீதியாக பொறுப்பேற்று, ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்த டெல்லி போலீசார் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

போராட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பகுதியில் சிறிது நேரம் பரபரப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்ட நிலையில், போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.