கோவை விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஒரு மாநிலத்தின் முதலமைச்சருக்கு மாநிலத்தின் எந்தப் பகுதிக்கும் செல்ல முழு உரிமை இருப்பதாகக் கூறினார். ஆனால், முதல்வர் விஜய் கரூர் செல்லும் பயணத்தைக் கண்டு திமுகவினர் ஏன் இவ்வளவு பதற்றமடைகிறார்கள் என்பது புரியவில்லை என்றார்.
முதல்வர் மக்களை நேரில் சந்திக்கும்போது அரசின் செயல்பாடுகள் குறித்து மக்கள் உண்மைகளை வெளிப்படுத்திவிடுவார்கள் என்ற அச்சமே திமுகவினருக்கு இருப்பதாக குற்றம்சாட்டிய அவர், இதைத் தடுக்க எந்த அடிப்படை ஆதாரமும் இல்லாமல் உச்சநீதிமன்றம் வரை சென்று மனுக்கள் தாக்கல் செய்து அனைவரின் நேரத்தையும் வீணடிப்பதாக விமர்சித்தார். வழக்கை முழுமையாகப் படித்துவிட்டு வருமாறு உச்சநீதிமன்ற நீதிபதிகளே திமுக தரப்புக்கு அறிவுறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த பல ஆண்டுகளாக மக்களுக்கு எந்த நன்மையும் செய்யாமல் துரோகம் செய்தவர்கள்தான் தற்போது முதல்வரின் பயணத்தைக் கண்டு அச்சமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக் ஆகியோர் காவல்துறை விசாரணைக்கு ஆஜராகாதது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், சம்மன் வழங்கப்பட்டால் நேரில் ஆஜராகி விளக்கம் அளிப்பதில் எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது என்றார். குற்றத்தில் தொடர்பு இருப்பதால்தான் அவர்கள் விசாரணைக்கு ஆஜராகாமல் தவிர்த்து வருவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
தங்களுக்கு கடந்த காலத்தில் மத்திய புலனாய்வு அமைப்பு (சிபிஐ) சம்மன் அனுப்பியபோது நேரில் ஆஜராகி விளக்கம் அளித்ததாகக் குறிப்பிட்ட அவர், செந்தில் பாலாஜி தன்னை சட்டத்திற்கு அப்பாற்பட்டவர் என நினைத்துக் கொள்ளக் கூடாது என்றும், காவல்துறை தனது கடமையை முறையாகச் செய்து வருவதாகவும் தெரிவித்தார்.
மின் கட்டண உயர்வு குறித்து எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், தற்போது மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை என்றார். பல மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் தமிழக மின்சாரத் துறை அதிக கடன் சுமையில் இருப்பதாகவும், அதைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும், மின்சாரத் துறையில் ஆறு மாத காலத்திற்கு சுமார் 15 ஆயிரம் பேர் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்தப்பட உள்ளதாகவும், இதற்காக மாவட்ட ஆட்சியர்கள் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டு பின்னணி சரிபார்ப்பு உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
இந்த நியமனங்கள் முழுமையான வெளிப்படைத்தன்மையுடனும் தகுதியின் அடிப்படையிலும் நடைபெற்று வருவதாகவும், எந்தவித சிபாரிசுக்கும் இடமளிக்கப்படவில்லை என்றும் அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.



Leave a Reply