முக்கோணக் காதல் விவகாரம்: புகைப்படக் கலைஞர் கொலை செய்யப்பட்டு தண்டவாளத்தில் வீசப்பட்ட அதிர்ச்சி

Spread the love
கோவை தடாகம் அருகே காணாமல் போன புகைப்படக் கலைஞர் பிரவீன் ரயில் மோதி உயிரிழந்ததாகக் கருதப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக, முக்கோணக் காதல் பிரச்சினையால் காரில் கழுத்தை நெரித்துக் கொலை செய்து, பின்னர் உடலை ரயில்வே தண்டவாளத்தில் வீசி தற்கொலை போல சித்தரித்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. இவ்வழக்கில் கரூரைச் சேர்ந்த இருவர் செவ்வாய்க்கிழமை கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

கோவை தடாகம் அருகே மடத்தூரைச் சேர்ந்த புகைப்படக் கலைஞர் பிரவீன் (24), கடந்த வாரம் புதிய புகைப்படப் பணிக்காக ஒட்டன்சத்திரம் செல்வதாகக் கூறிவிட்டு வீட்டை விட்டு வெளியேறிய நிலையில், வீடு திரும்பாததால் அவரது குடும்பத்தினர் தடாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

இதற்கிடையில், கிணத்துக்கடவு அருகே ஏ.பி.சி. திரையரங்கம் பின்புறம் உள்ள ரயில்வே தண்டவாளத்தில் ரயிலில் அடிபட்டு உடல் சிதைந்த நிலையில் கிடந்த சடலம் பிரவீனுடையது என்பது உறுதி செய்யப்பட்டது. முதலில் இது ரயில் விபத்து அல்லது தற்கொலை எனக் கருதப்பட்டு போத்தனூர் ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், கரூரைச் சேர்ந்த மனோஜ் மற்றும் அவரது நண்பர் கார்த்திகேயன் ஆகியோர் கோவை ஜே.எம்.1 நீதிமன்றத்தில் ஆஜராகி, பிரவீனைத் திட்டமிட்டு கொலை செய்து தண்டவாளத்தில் வீசியதாக சரணடைந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கரூரைச் சேர்ந்த மனோஜ், கோவை சாய்பாபா காலனியைச் சேர்ந்த பெண் ஒருவருடன் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும், அந்தப் பெண் பிரவீனுடனும் நெருக்கமாக பழகி வந்தது தெரியவந்ததைத் தொடர்ந்து, பிரவீனை அகற்ற திட்டமிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

இதற்காக, புகைப்படப் பணி இருப்பதாகக் கூறி பிரவீனை ஒட்டன்சத்திரத்துக்கு வரவழைத்த மனோஜ், தனது நண்பர் கார்த்திகேயனுடன் சேர்ந்து அவருக்கு அதிக அளவில் மது அருந்தக் கொடுத்ததாகக் கூறப்படுகிறது. பின்னர் காரில் அழைத்துச் செல்லும் போது, பின்புற இருக்கையில் இருந்த இருவரும் கயிற்றால் அவரது கழுத்தை நெரித்துக் கொலை செய்ததாக போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

கொலையை மறைக்க, பிரவீனின் உடலை காரில் கொண்டு வந்து கிணத்துக்கடவு அருகே போத்தனூர் ரயில்வே எல்லைக்குட்பட்ட தண்டவாளத்தில் வீசியுள்ளனர். பின்னர் அந்த வழியாக வந்த ரயில் உடலின் மீது ஏறிச் சென்றதால், அது ரயில் விபத்து அல்லது தற்கொலை எனத் தோன்றும் வகையில் சிதைந்ததாகக் கூறப்படுகிறது.

தடாகம் போலீஸாரும், போத்தனூர் ரயில்வே போலீஸாரும் விசாரணையை தீவிரப்படுத்தியதைத் தொடர்ந்து, கைது நடவடிக்கையைத் தவிர்க்கும் நோக்கில் இருவரும் நீதிமன்றத்தில் சரணடைந்ததாகக் கூறப்படுகிறது.

இந்தச் சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. வழக்கின் மேலதிக விசாரணையை போலீஸார் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.