கோவை காந்திபுரம் ஆவின் விற்பனை மையத்தில் அமைச்சர் விஜயலட்சுமி திடீர் ஆய்வு

Spread the love

கோவை காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள ஆவின் விற்பனை மையத்தில் பால்வளத்துறை அமைச்சர் விஜயலட்சுமி செவ்வாய்க்கிழமை திடீர் ஆய்வு மேற்கொண்டு, பால் பொருட்களின் தரம், இருப்பு மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்களை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்திருந்த அமைச்சர் விஜயலட்சுமி, திடீரென காந்திபுரம் பேருந்து நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் ஆவின் பால்பொருட்கள் விற்பனை மையம் மற்றும் தேநீர் கடைக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது, விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த ஆவின் பால் மற்றும் பால்பொருட்களின் இருப்பு, விற்பனை நிலவரம் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும், விற்பனை மற்றும் இருப்பு தொடர்பான பதிவேடுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, ஒவ்வொரு பொருளின் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதி தேதியை நேரில் சரிபார்த்த அமைச்சர், குளிர்சாதனப் பெட்டியில் வைக்கப்பட்டிருந்த பால்பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தார்.

ஆய்வின்போது, காலாவதி தேதியை நெருங்கிய பொருட்களை விற்பனை செய்யாமல், உரிய நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு தரமான மற்றும் பாதுகாப்பான பால்பொருட்களை மட்டுமே வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுறுத்தினார்.

இந்த திடீர் ஆய்வு காரணமாக காந்திபுரம் ஆவின் விற்பனை மையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.