விவசாய உழவுக் கருவிகளுக்கு பெட்ரோல், டீசலை கேன்களில் வழங்க அனுமதிக்க வேண்டும் என வலியுறுத்தி, தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு பெட்ரோல், டீசல் கேன்கள் மற்றும் உழவுக் கருவிகளுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். விவசாயப் பணிகளுக்கு பயன்படுத்தப்படும் பல்வேறு உழவுக் கருவிகளுக்கு பெட்ரோல் மற்றும் டீசல் கேன்களில் வழங்கும் நடைமுறையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்பதே அவர்களின் முக்கிய கோரிக்கையாக இருந்தது.
போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள், பெரிய அளவிலான எரிபொருள் கேன்களையும் சிறிய ரக உழவுக் கருவிகளையும் எடுத்துவந்து கோரிக்கை முழக்கங்களை எழுப்பினர். பல உழவுக் கருவிகளை நேரடியாக பெட்ரோல் நிலையங்களுக்கு எடுத்துச் செல்ல முடியாததால், கேன்களில் எரிபொருள் வாங்கி பயன்படுத்துவது அவசியம் என அவர்கள் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய தமிழ்நாடு விவசாயிகள் சங்கத் தலைவர் சு. பழனிச்சாமி, கேன்களில் பெட்ரோல், டீசல் வழங்குவதற்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் விவசாயிகளை கடுமையாக பாதித்துள்ளதாகக் கூறினார். விவசாய அட்டை வைத்திருப்போருக்கு சிறப்பு விலக்கு அளித்து எரிபொருளை கேன்களில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதுதொடர்பாக மாநில அரசு மத்திய அரசிடம் உடனடியாக வலியுறுத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் விவசாயப் பணிகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகும் எனவும் போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் எச்சரித்தனர்.



Leave a Reply