உலக யோகா தினத்தை முன்னிட்டு கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாணவிகள் யோகா மற்றும் தியானப் பயிற்சிகளில் ஈடுபட்டதுடன், 108 முறை தொடர் சூரிய நமஸ்காரம் செய்து அசத்தினர்.
கோவையில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் உலக யோகா தினம் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சியில் கல்லூரி மாணவிகள் அனைவரும் இணைந்து யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை மேற்கொண்டதோடு, 108 முறை தொடர் சூரிய நமஸ்காரம் செய்து யோகாவின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டினர்.
ஆழியாறு வாழ்க வளமுடன் அமைப்பின் யோகா பேராசிரியர் சி. பாஸ்கரன் சிறப்பு விருந்தி னராக கலந்து கொண்டு மாணவிகளுக்கு யோகா மற்றும் தியானத்தின் அவசியம் குறித்து விளக்கி பயிற்சியளித்தார். யோகா உடல் ஆரோக்கியம், மன அமைதி மற்றும் ஒட்டுமொத்த நலவாழ்வை மேம்படுத்த உதவுவதாகவும், இளம் வயதிலேயே உடல் மற்றும் மனநலத்தில் கவனம் செலுத்த யோகாவை வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாற்ற வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்த கல்லூரி முதல்வர் முனைவர் கி. சித்ரா, மாணவிகள் தினமும் காலை நேரத்தில் எளிய மூச்சுப் பயிற்சிகளை மேற்கொள்வதால் மனஅழுத்தம் குறைந்து, தெளிவான சிந்தனை மற்றும் கற்றல் திறன் மேம்படுவதாக தெரிவித்தார். யோகா மற்றும் தியானப் பயிற்சிகளை தொடர்ந்து கடைப்பிடிப்பதன் மூலம் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ முடியும் என்றும் அவர் கூறினார்.
ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரி மாணவிகள் 108 முறை சூரிய நமஸ்காரம்



Leave a Reply