தமிழக முதல்வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான ஜோசப் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு, கோவை குனியமுத்தூர் வடக்கு பகுதியில் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் பிறந்தநாள் இன்று மாநிலம் முழுவதும் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், கோவை புறநகர் வடக்கு மாவட்டம் குனியமுத்தூர் வடக்கு பகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
எம்.எஸ். கிவிங்டன் (ஜே.பி. மசாலா), என். குப்புராஜ் (இந்தியன் வுட் ஒர்க்) ஆகியோர் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு பகுதி செயலாளர் பைசல் தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் பொதுமக்களுக்கு மருத்துவ உதவி, கல்வி உதவி, கல்விப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், வேஷ்டி-சேலை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மேலும், பங்கேற்ற அனைவருக்கும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் பொருளாளர் ஹாரூன், இணைச் செயலாளர் முகமது அலி உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் இளைஞரணி, மகளிரணி, வார்டு நிர்வாகிகள், உறுப்பினர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக முதல்வர் விஜயின் பிறந்தநாளை முன்னிட்டு கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கப்பட்டதுடன், கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.



Leave a Reply