கோவையில் இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்து எரிப்பு

Spread the love
கோவை ஆர்.எஸ்.புரம் அருகே உள்ள பட்டு நூல்கார சந்து பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞர் அபுதாகிர் பாஷா கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, உடல் எரிக்கப்பட்ட நிலையில் சாக்கடையில் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆக்டிங் டிரைவராகப் பணியாற்றி வந்த அபுதாகிர் பாஷா, நண்பர் ஒருவருடன் இணைந்து பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த மே 29-ஆம் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற அவர், அதன் பின்னர் வீடு திரும்பவில்லை.

மகன் காணாமல் போனதை அடுத்து அவரது தாய் பாத்திமா, ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அபுதாகிர் பாஷாவைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

இந்நிலையில், சிரியன் சர்ச் ரோடு பகுதியில் உள்ள சாக்கடையில் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் ஒன்று கிடப்பதாக போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், மீட்கப்பட்ட உடல் மாயமான அபுதாகிர் பாஷாவின்து என்பது உறுதி செய்யப்பட்டது. மேலும், அவரது வயிற்றுப் பகுதியில் பலத்த கத்திக்குத்து காயங்கள் இருந்ததும் தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க உடலை எரிக்க முயற்சித்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இந்த கொடூரக் கொலை சம்பவம் குறித்து தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீசார், முன்விரோதம், தொழில் தொடர்பான பிரச்சினை அல்லது பெண் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

கோவை மாநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை விரைவில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.