சூலூர் அருகே 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், சிறுமியின் தாயார் பவித்ரா செய்தியாளர்களை சந்தித்து பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். தனது சம்மதம் இல்லாமல் மகளின் உடல் எரிக்கப்பட்டதாகவும், வழக்கை திசைதிருப்பும் வகையில் தன்னைப் பற்றி அவதூறுகள் பரப்பப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கே தெரியாமல் என் குழந்தையின் உடலை எடுத்துச் சென்றுள்ளனர். என் சம்மதம் இல்லாமல் உடலை எரித்துள்ளனர். உரிய தண்டனை கிடைத்த பிறகே உடலை வாங்குவேன் என்று தெரிவித்திருந்தேன். ஆனால், என்னிடம் தெரிவிக்காமல் என் கணவரிடம் கையெழுத்து வாங்கி உடலை எடுத்துச் சென்றுள்ளனர்” என்றார்.
மேலும், “என் குழந்தையின் உடலை என் கண்களுக்குக் கூட காட்டவில்லை. யார் மீது குற்றம் என்பதை நிரூபிக்க குழந்தையின் உடல் இப்போது இல்லை. உடலை எரிப்பதில் ஏன் இவ்வளவு அவசரம் காட்டப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.
தன்னை குறித்து சமூக வலைதளங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் பொய்யானவை என்றும், “தேவையற்ற வதந்திகள் என் மீது பரப்பப்படுகின்றன. வழக்கை திசைதிருப்பவே இதுபோன்ற அவதூறுகள் பரப்பப்படுகின்றன” என்றும் அவர் தெரிவித்தார்.
தனது கணவர் குறித்து பேசும்போது, “அவர் மது அருந்துபவர். குளிர்பானத்தில் மது கலந்திருந்தது எனக்கு தெரியாது. தெரியாமல் அதை குடித்துவிட்டேன்” என்றார்.
மேலும், “வீட்டை காலி செய்து சென்ற பிறகு கார்த்தி எங்கள் வீட்டிற்கு வந்ததில்லை. கடை அருகே குழந்தை விளையாடிக் கொண்டிருந்தபோதுதான் கடத்தப்பட்டது. எங்களுக்குள் குடும்பத் தகராறு எதுவும் இல்லை” என்றும் கூறினார்.
மருத்துவமனையில் தனது கணவரின் மனதை மாற்றி குழந்தையின் உடலை பெற்றுச் சென்றதாக குற்றம்சாட்டிய அவர், “எனக்கு நிதி உதவி வேண்டாம்; நீதி வேண்டும். கொலையாளிகளுக்கு வழங்கப்படும் தண்டனையை பார்த்து இனி யாரும் இதுபோன்ற குற்றங்களில் ஈடுபடக்கூடாது” என்று உருக்கமாக தெரிவித்தார்.
மேலும், “கொலையாளி கார்த்தியுடன் இருந்த பெண்ணுக்கும் இந்த கொலையில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகம் உள்ளது. அந்த பெண்ணிடமும் காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது” என்றார்.
முதலமைச்சர் தங்களிடம் தொலைபேசியில் பேசியதாக தெரிவித்த அவர், “விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், நேரில் சந்திப்பதாகவும் உறுதியளித்துள்ளார்” என்றார்.
“என் மகனையும் என்னிடம் இருந்து பிரித்து வைத்துள்ளனர். என் மீது அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு ஏதாவது நடந்தால் அதற்கு காரணம் அவதூறு பரப்புபவர்களே” என்றும் அவர் கூறினார்.
சூலூர் சிறுமி கொலை வழக்கு தொடர்பாக தொடர்ந்து பரபரப்பு நிலவி வரும் நிலையில், சிறுமியின் தாயார் முன்வைத்துள்ள இந்த குற்றச்சாட்டுகள் புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளன.



Leave a Reply