கோவை இருகூர் நியூ காலனி பகுதியைச் சேர்ந்த பாரதிராஜாவின் மகன், அருகிலுள்ள ஆர்.ஜி. புதூர் அரசு பள்ளியில் 7ஆம் வகுப்பு படித்து வந்தான். கோடை விடுமுறை காரணமாக கடந்த மே 15ஆம் தேதி பிற்பகலில் தனது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து, இருகூர் மாசாணி அம்மன் கோவில் அருகிலுள்ள வாய்க்காலுக்கு மீன் பிடிக்கச் சென்றிருந்தான்.
அங்கு விளையாடிக் கொண்டிருந்தபோது, சிறுவர்களுக்குள் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த இரு நண்பர்கள் அங்கிருந்த காலி மதுபாட்டிலால் அந்த மாணவனின் தலையில் தாக்கியுள்ளனர். பலத்த காயமடைந்த மாணவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இரவு நீண்ட நேரமாகியும் மகன் வீடு திரும்பாததால் பதற்றமடைந்த பெற்றோர், அவனுடன் சென்ற நண்பர்களிடம் விசாரித்துள்ளனர். ஆனால், சந்தேகத்தை தவிர்க்கும் நோக்கில், “யாரோ ஒருவருடன் அவன் தனியாக சென்றான்” என்று அவர்கள் கூறியதாக தெரிகிறது.
இதையடுத்து, சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் மாணவன் மாயமானதாக பெற்றோர் புகார் அளித்தனர். போலீசார் மேற்கொண்ட தீவிர விசாரணையில், நண்பர்கள் இருவரும் உண்மையை ஒப்புக்கொண்டனர். மாணவனை கொன்ற பின்னர், சிக்கிக் கொள்ளக் கூடாது என்பதற்காக உடலை அங்கேயே குழி தோண்டி புதைத்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
சிறுவர்கள் காட்டிய இடத்துக்குச் சென்ற போலீசார், இன்று காலை மாணவனின் உடலை தோண்டி மீட்டனர். தன் மகன் உயிருடன் திரும்புவான் என நம்பியிருந்த பெற்றோர், மண்ணுக்குள் புதைக்கப்பட்ட நிலையில் உடலை கண்டதும் கதறி அழுத காட்சி அங்கிருந்தவர்களை உருக்கமடையச் செய்தது.
மாணவனின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கொலை வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், கைது செய்யப்பட்ட இரு சிறுவர்களிடமும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



Leave a Reply