தமிழ்நாடு சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆற்றிய உரையில் “மக்களை பிரிக்கும் சனாதனம் ஒழிக்கப்பட வேண்டும்” என்று கூறியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்டப்பேரவையில் தனது முதல் உரையின் நிறைவில் பேசிய உதயநிதி ஸ்டாலின், “மக்களை பிரிக்கும் சனாதனம் நிச்சயமாக ஒழிக்கப்பட வேண்டும்” என தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின. இந்த கருத்து அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பேச்சுக்கு தமிழக பாஜக மற்றும் பல இந்து அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தமிழக பாஜக தலைவர் நைனர் நாகேந்திரன், “இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பேச்சு இது” என்று விமர்சித்துள்ளார். மேலும், பாஜக தேசிய நிர்வாகி அமித் மாளவியாவும் உதயநிதியின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இந்து முன்னணி அமைப்பினர் மாநிலம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உதயநிதி ஸ்டாலின் தனது கருத்தை திரும்பப் பெற வேண்டும் என்றும், மத உணர்வுகளை புண்படுத்தும் வகையிலான பேச்சுகளை தவிர்க்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
உதயநிதி ஸ்டாலின் முன்பும் “சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டும்” என்ற கருத்தை வெளியிட்டு நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு நீதிமன்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டிருந்தன.



Leave a Reply