ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் கசிவு நடைபெற்றதாக கூறப்படும் விவகாரத்தை கண்டித்தும், மத்திய கல்வி அமைச்சர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் கட்சியினர் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், தமிழ்நாடு மாணவர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் உதயகுமார் தலைமையில் நடைபெற்றது. இதில் 100-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் கட்சியினர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
ஆர்ப்பாட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயகுமார், “ராஜஸ்தான் மாநிலத்தில் நீட் தேர்வு வினாத்தாள் வெளியானதால் இந்தியா முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மாணவர்களின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ளது,” என்றார்.
மேலும், இந்த விவகாரத்திற்கு பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.



Leave a Reply