உபி, ஹரியானா தொழிலாளர்கள் மீதான அடக்குமுறையை கண்டித்து கோவையில் மத்திய தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

Spread the love

உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானா மாநிலங்களில் போராடும் தொழிலாளர்கள் மீது நடைபெறும் அடக்குமுறைகளை கண்டித்தும், பல்வேறு தொழிலாளர் நலக் கோரிக்கைகளை வலியுறுத்தியும் கோவையில் மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் இன்று “தேசிய கோரிக்கை நாள்” ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலுள்ள பி.எஸ்.என்.எல் அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உத்தரப் பிரதேசம் மற்றும் ஹரியானாவில் ஊதிய உயர்வு கோரி போராடும் தொழிலாளர்கள் மீது காவல்துறை மேற்கொள்ளும் அடக்குமுறைகளை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினர். மேலும், போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட தொழிலாளர்களை நிபந்தனையின்றி விடுதலை செய்ய வேண்டும் என்றும், அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.

அதேபோல், மத்திய அரசு கொண்டு வந்துள்ள நான்கு தொழிலாளர் விரோதச் சட்டத் தொகுப்புகளையும் திரும்பப் பெற வேண்டும் என்றும், தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில் மாதம் ரூ.26 ஆயிரம் குறைந்தபட்ச ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி, எல்பிஎஃப், ஐஎன்டியுசி, எச்எம்எஸ், ஏஐசிசிடியு, டிடிஎம்எஸ், எம்எல்எப், யுடியுசி, எஸ்டிடியு உள்ளிட்ட பத்திற்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

சிஐடியு மாவட்ட செயலாளர் எஸ். கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட தலைவர் கே. மனோகரன், மாநிலக்குழு உறுப்பினர் சத்யா, எல்பிஎஃப் சார்பில் சிடிசி பி. துரை, ராக்கி முத்து, ஏஐடியுசி சார்பில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம். ஆறுமுகம், சி. தங்கவேல், ஐஎன்டியுசி சார்பில் பாசமலர் பி. சண்முகம், என். புவனேஸ்வரி உள்ளிட்ட பல்வேறு சங்க நிர்வாகிகள் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தினர்.