தமிழகத்தின் 18-வது முதல்வராக ஜோசப் விஜய் பதவியேற்பு

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் ஜோசப் விஜய் இன்று தமிழகத்தின் 18-வது முதலமைச்சராக பதவியேற்றுக் கொண்டார். சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஆளுநர் ஆர்.என். அர்லேகர் அவருக்கு பதவிப் பிரமாணமும், ரகசியக் காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.

இன்று காலை 10 மணியளவில் தொடங்கிய பதவியேற்பு விழா, வந்தே மாதரம் இசையுடன் ஆரம்பமானது. பின்னர் தேசிய கீதம் மற்றும் தமிழ்த் தாய் வாழ்த்து பாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து, “சி. ஜோசப் விஜய் எனும் நான்” என்று உறுதிமொழி ஏற்று விஜய் பதவியேற்றுக் கொண்டார். அப்போது அரங்கம் முழுவதும் திரண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத் தொண்டர்கள் ஆரவாரத்துடன் கைதட்டி உற்சாகம் வெளிப்படுத்தினர்.

இந்த நிகழ்வில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, முன்னாள் ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், கூட்டணி கட்சித் தலைவர்கள் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர். மேலும் நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர், நடிகை த்ரிஷா, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, திரையுலக நண்பர்கள் மற்றும் உறவினர்களும் விழாவில் பங்கேற்றனர்.