கோவையில் குப்பை கொட்டிய தகராறு: மூதாட்டி வெட்டிக்கொலை

Spread the love

கோவை ஆலாந்துறை அருகே குப்பை கொட்டிய தகராறு காரணமாக மூதாட்டி ஒருவர் அரிவாளால் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை ஆலாந்துறை அடுத்த காருண்யா நகர் அருகே உள்ள நல்லூர்வயல் சப்பாணிமடை பகுதியை சேர்ந்த ஜெசி (72) என்பவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக அப்பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார். அவரது வீட்டின் அருகே வசித்து வந்த நோபிள் வாட்சன் (47) என்பவருடன் வீட்டின் முன்பு குப்பை கொட்டுவது தொடர்பாக கடந்த ஓராண்டுக்கும் மேலாக அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், வியாழக்கிழமை காலை ஜெசி வீட்டின் முன்பு குப்பை கொட்டியதாக தெரிகிறது. இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த நோபிள் வாட்சன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜெசியின் கழுத்தில் சரமாரியாக வெட்டியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஜெசி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த காருண்யா நகர் காவல்துறையினர், உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், சம்பவத்திற்குப் பிறகு தப்பிச் செல்ல முயன்ற நோபிள் வாட்சனை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பை கொட்டிய தகராறு கொலையில் முடிந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.