ஆர்.எஸ்.புரத்தில் மரம் வேரோடு சாய்ந்து விபத்து – சரக்கு வாகன ஓட்டுநர் படுகாயம்

Spread the love

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரத்தில் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில், வாகன ஓட்டுநர் பலத்த காயமடைந்தார். மேலும், சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்களும் சேதமடைந்ததால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

கோவை ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் சரக்கு வாகனம் சென்று கொண்டிருந்தபோது, சாலையோரத்தில் இருந்த பழமையான மரம் திடீரென வேரோடு சாய்ந்து வாகனத்தின் மீது விழுந்தது. இந்த விபத்தில் வாகனம் இடிபாடுகளுக்குள் சிக்கியதால், ஓட்டுநருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.

சம்பவத்தை கண்ட பொதுமக்கள் உடனடியாக ஓட்டுநரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

மரம் சாய்ந்ததில் சரக்கு வாகனம் மட்டுமின்றி, சாலையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் மீதும் கிளைகள் விழுந்து சேதமடைந்தன.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், ராட்சத ரம்பங்கள் மூலம் மரத்தை துண்டு துண்டாக வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *