வெள்ளியங்கிரி மலை ஏற்றத்தின் போது பக்தர் உயிரிழப்பு

வெள்ளியங்கிரி மலை
Spread the love

கோவை அருகே உள்ள வெள்ளியங்கிரி மலை ஏறிய பக்தர் ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளியங்கிரி மலையின் ஏழாவது மலை உச்சியில் சுயம்பு வடிவில் அருள்பாலிக்கும் ஈசனை தரிசிக்க ஆண்டுதோறும் பிப்ரவரி முதல் மே மாதம் வரை பக்தர்களுக்கு மலையேற்றம் அனுமதிக்கப்படுகிறது. நீதிமன்ற உத்தரவின்படி, இந்த ஆண்டும் மலையேற்றத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மாத இறுதி முதல் கோடை வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலையேறும் போது பலர் உடல்நலக் குறைவு ஏற்பட்டு பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை கருத்தில் கொண்டு, வனத்துறையினர் பக்தர்கள் காலை 9 மணி வரை மற்றும் மாலை 4 மணிக்குப் பிறகு மட்டுமே மலையேறுமாறு அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அதிக வெப்பம் காணப்படும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மலையேற்றத்தைத் தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இந்நிலையில், சித்ரா பெளர்ணமி தினத்தை முன்னிட்டு மலையேற்றம் மேற்கொண்ட 34 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், ஏழாவது மலை பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக உறுதி செய்தனர்.

உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை தெரியாத நிலையில், ஆலந்துறை போலீசார் சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.