பில்லுார் அணையும், பவானி ஆறும், கோவை, திருப்பூர் மாவட்டங்களின் குடிநீர் ஆதாரமாக உள்ளது. அணை மற்றும் பவானி ஆற்றில் இருந்து தினமும், 27 குடிநீர் திட்டங்களுக்கு, பல கோடி லிட்டர் நீர் எடுக்கப்படுகிறது. திருப்பூர், கோவை ஆகிய மாநகராட்சிகள், தொண்டாமுத்துார், காரமடை, மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வகையில், பவானி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டி, தண்ணீரை தேக்கி வைத்து, அதிலிருந்து குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்படுகிறது.
கடந்த மாதம், பில்லுார் அணையின் நீர்மட்டம் மிகவும் குறைந்ததால், பவானி ஆற்றில் தண்ணீர் திறந்து விடுவது நிறுத்தப்பட்டது. இதனால், மேட்டுப்பாளையம் நகரில் இருந்து சிறுமுகை வரை பவானி ஆறு வறண்டு காணப்பட்டது. இந்த ஆற்றை நம்பி இருந்த, 16 குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் பம்பிங் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால், இதை நம்பியுள்ள பல லட்சம் மக்கள், போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிப்பட்டனர். இதையடுத்து தமிழக அரசு, நீலகிரி மாவட்டத்தில் உள்ள அணைகளில் இருந்து குடிநீருக்கு பில்லுார் அணைக்கு நீர் திறந்து விட ஏற்பாடு செய்தது. மஞ்சூர் பகுதியில் உள்ள அணைகளில் இருந்து, பில்லுார் அணைக்கு குடிநீருக்கு நீர் திறந்து விடப்பட்டது. பில்லுார் அணையில் இருந்து பவானி ஆற்றில் நீர் திறந்து விட்டதால், கடந்த பத்து நாட்களாக ஆற்றில் நீரோட்டம் இருந்தது. தற்போது மஞ்சூர் பகுதியில் உள்ள அணைகளிலும் நீர் குறைந்ததால், பில்லுார் அணைக்கு திறந்து விடும் நீர் நிறுத்தப்பட்டது. பில்லுார் அணையில் இருந்தும், நீர் திடீரென நிறுத்தப்பட்டது. இதனால் நேற்று பவானி ஆற்றில் நீரோட்டம் இல்லாமல், மீண்டும் வறண்டு காணப்பட்டது.



Leave a Reply