வானதி சீனிவாசனுக்காக வீதிவீதியாக வாக்கு சேகரித்த டெல்லி முதல்வர் ரேகா குப்தா

Spread the love

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவருக்கு ஆதரவாக டெல்லி முதல்வர் ரேகா குப்தா இன்று கோவையில் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
முன்னதாக மருத்துவ மனைக்குச் சென்று வானதி சீனிவாசனை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ரேகா குப்தா, மாலை நேரத்தில் திறந்த வாகனத்தில் தொகுதி முழுவதும் வீதிவீதியாகச் சென்று வாக்கு சேகரிப்பைத் தொடங்கினார்.
“ஓட்டு ஃபார் தாமரை, ஓட்டு ஃபார் வானதி” என்ற முழக்கங்களுடன் ஆரம்பமான இந்த பிரச்சாரம், கோவை வடக்கு தொகுதியின் பல முக்கிய பகுதிகளைச் சுற்றி நடைபெற்றது. அவிலா பள்ளி, வெங்கடாபுரம், கே.கே. புதூர், சின்னம்மாள் நகர், எஸ்.பி.ஐ ரோடு, கண்ணப்பன் நகர், நாராயணசாமி லே-அவுட் உள்ளிட்ட பகுதிகளில் அவர் சூறாவளிப் பயணம் மேற்கொண்டார்.
பாதை முழுவதும் திரண்டு இருந்த பொதுமக்கள், பா.ஜ.க, அ.தி.மு.க மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சித் தொண்டர்கள் இடையே ரேகா குப்தா தீவிரமாக வாக்கு சேகரித்தார். அவரது வருகை கூட்டணி கட்சித் தொண்டர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது.
ஒரு மாநிலத்தின் முதல்வர் நேரடியாக கோவையின் வீதிகளில் இறங்கி ஒரு வேட்பாளருக்காக பிரச்சாரம் செய்வது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.
வானதி சீனிவாசன் இல்லாத நிலையில், அவரின் குறையைப் பூர்த்தி செய்யும் வகையில் டெல்லி முதல்வர் உள்ளிட்ட கட்சியின் முக்கிய தலைவர்கள் களத்தில் இறங்கியுள்ளதால், கோவை வடக்கு தொகுதித் தேர்தல் தற்போது தேசிய அளவிலான கவனத்தை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *