நல்லாட்சி மலர வாக்களியுங்கள் இரட்டை இலைக்கு… கோவை மக்களிடம் இபிஎஸ்…

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு நடைபெற்று வரும் சூறாவளி சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவை சித்தபுதூர் ஆவாரம்பாளையம் சாலை சந்திப்பில் இருந்து வி.கே.கே. மேனன் சாலை வரை ரோடு ஷோ மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்தார்.
பின்னர் அங்கு திரண்டிருந்த மக்களிடம் பேசிய அவர், கோவை தெற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அம்மன் அர்ஜுனன், சிங்காநல்லூர் தொகுதியில் கே.ஆர். ஜெயராமன் மற்றும் கோவை வடக்கில் கூட்டணி வேட்பாளராக வானதி சீனிவாசன் போட்டியிடுவதாக குறிப்பிட்டார். ஏற்கனவே மக்கள் பணியில் ஈடுபட்ட அனுபவமுள்ளவர்கள் என்பதால், அவர்களுக்கு ஆதரவு அளிக்குமாறு கேட்டுக்கொண்டார்.
திமுக ஆட்சியில் மக்கள்மீது கடுமையான வரிச்சுமை சுமத்தப்பட்டுள்ளதாகவும், மின்கட்டணம், வீட்டுவரி, கடைவரி உள்ளிட்ட பல கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம்சாட்டினார். மேலும், அத்தியாவசிய உணவுப்பொருட்களின் விலையும் அதிமுக ஆட்சியுடன் ஒப்பிடும்போது பெரிதும் உயர்ந்துவிட்டதாக கூறினார்.
கோவை தொழில்கள் மற்றும் தொழிலாளர்கள் அதிகம் வாழும் மாவட்டம் என்பதால், இந்தப் பகுதியின் வளர்ச்சிக்காக நல்லாட்சி அவசியம் என வலியுறுத்திய அவர், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு அதிமுக எப்போதும் துணையாக இருக்கும் என்றார்.
சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாகவும், தமிழ்நாட்டில் போதைப்பொருள் பிரச்சினை அதிகரித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
அதிமுக ஆட்சி அமைந்த மூன்று மாதங்களுக்குள் கஞ்சா மற்றும் போதைப்பொருள் விற்பனைக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என உறுதியளித்தார்.
மேலும், கோவைக்காக அதிமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை பட்டியலிட்ட அவர், சாலைகள், மேம்பாலங்கள், குடிநீர் திட்டங்கள், மருத்துவமனைகள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல பணிகள் அதிமுக காலத்தில் தொடங்கப்பட்டதாக குறிப்பிட்டார்.
மக்களுக்கான தேர்தல் வாக்குறுதிகளாக, குடும்பத் தலைவியருக்கு மாதம் ரூ.2,000, வங்கிக் கணக்கில் ரூ.10,000 உதவித்தொகை, இலவச ஃப்ரிட்ஜ், மூன்று இலவச எரிவாயு சிலிண்டர்கள், பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல நலத்திட்டங்களை அறிவித்தார்.
இறுதியாக, அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்திலும், கூட்டணி வேட்பாளருக்கு தாமரை சின்னத்திலும் வாக்களிக்குமாறு மக்களிடம் வேண்டுகோள் விடுத்து, “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” என்று தனது உரையை நிறைவு செய்தார்.
இந்த பிரச்சாரத்தின் போது முன்னாள் அமைச்சரும் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளருமான எஸ்.பி.வேலுமணி உடனிருந்தார்.