கோவை மக்களை தி.மு.க அவமரியாதை செய்து உள்ளது – வானதி சீனிவாசன் கண்டனம்

Spread the love

கேரள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பாலக்காடு மற்றும் திருச்சூரில் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை சர்வதேச விமான நிலையத்திற்கு தனி விமானத்தில் வந்தார்.

அவரை பாரதிய ஜனதா கட்சி மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, மத்திய அமைச்சர் எல். முருகன் உள்ளிட்ட பா.ஜ.க நிர்வாகிகள் மற்றும் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்ட தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி தலைவர்கள் வரவேற்றனர்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, கேரள தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வழியாக சென்ற பிரதமர் நரேந்திர மோடியை பா.ஜ.க மாநிலத் தலைவர் மற்றும் முக்கிய நிர்வாகிகள், தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் இணைந்து வரவேற்றதாக தெரிவித்தார்.

தமிழகத்தில் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளதாகவும், அனைத்து அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து வருவதாகவும் அவர் கூறினார். கோவை தெற்கு தொகுதிக்காக தி.மு.க முன்னாள் அமைச்சரை வேட்பாளராக அறிவித்திருப்பது குறித்து விமர்சித்த அவர், தமிழக வரலாற்றிலேயே சிறையில் இருந்த ஒருவரை அமைச்சராக வைத்த பெருமை தி.மு.கக்கு தான் உண்டு என குற்றம்சாட்டினார். இவ்வாறு ஊழல் குற்றச்சாட்டுகள் உள்ள ஒருவரை கோவை போன்ற முக்கிய இடத்தில் வேட்பாளராக நிறுத்தியதன் மூலம் கோவை மக்களை தி.மு.க அவமரியாதை செய்துள்ளதாகவும் அவர் கூறினார்.

மேலும், தி.மு.க கட்சியில் நீண்ட காலமாக பணியாற்றி அந்த பகுதியை வளர்த்த உள்ளூர் நிர்வாகிகளுக்கு வாய்ப்பு வழங்காமல் வெளி மாவட்டத்தை சேர்ந்த ஒருவரை வேட்பாளராக அறிவித்திருப்பது தேசிய ஜனநாயக கூட்டணியின் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றும் தெரிவித்தார். 2021 தேர்தலில் போலவே 2026 தேர்தலிலும் கோவை மாவட்டத்தில் அனைத்து தொகுதிகளையும் தேசிய ஜனநாயக கூட்டணி கைப்பற்றும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழக தலைவர் அறிவித்துள்ள வேட்பாளர் பட்டியல் குறித்து கேட்டபோது, புதிய அரசியல் கட்சிகள் தொடங்கும்போது பெரிய எதிர்பார்ப்புகளுடன் பேசுவது இயல்பானது என்றார். ஆனால் தேர்தல் அரசியல் வேறுபட்டது என்றும், தேர்தல் களத்தில் சில நாட்கள் கழித்து அவர்களின் நிலை தெரியும் என்றும் கூறினார். தி.மு.கக்கு மாற்றாக தமிழகத்தில் வேறு கட்சி இல்லை என்ற கருத்தை ஏற்க முடியாது என்றும் தெரிவித்தார்.

மேலும், தி.மு.க “தமிழ்நாடு எதிராக டெல்லி” என்ற அரசியல் பிரச்சாரத்தை முன்னிறுத்துகிறது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி “தமிழகத்தின் வளர்ச்சி எதிராக தி.மு.க குடும்ப அரசியல் மற்றும் ஊழல் அரசியல்” என்ற கோஷத்துடன் தேர்தலை சந்திக்கும் எனவும் வானதி சீனிவாசன் கூறினார்.

கோவை வடக்கு தொகுதிக்கான வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், பாரதிய ஜனதா கட்சி தேசிய அளவிலான கட்சி என்பதால் மாநிலத்தில் மட்டும் முடிவு எடுக்க முடியாது என்றார். தேர்தல் பொறுப்பாளர் பியூஸ் கோயல் வெளிநாட்டில் இருப்பதால் அவர் திரும்பிய பிறகு மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் நடைபெற்று, பின்னர் டெல்லியில் இருந்து வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவார்கள் என்றார்.

அண்ணாமலை பிரதமரை வரவேற்க வரவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், வரவேற்பாளர்கள் பட்டியலில் அவரது பெயர் இருந்ததாகவும், ஆனால் அவர் வரவில்லை என்று தகவல் கிடைத்ததாகவும் கூறினார்.

அண்ணாமலைக்கு சீட் வழங்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு குறித்து கேட்டபோது, பா.ஜ.க கட்டுக்கோப்பான கட்சி என்றும், யாருக்கு எந்த பொறுப்பு வழங்க வேண்டும் என்பதை கட்சி தலைமை தீர்மானிக்கும் என்றும் கூறினார். தேர்தல் அரசியலில் வெற்றி வாய்ப்பு உள்ளிட்ட பல அம்சங்களை கருத்தில் கொண்டு தான் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்தார்.