திருநங்கை உரிமைகளை பாதிக்கும் சட்டத் திருத்தம் – கல்கி சுப்பிரமணியம் கண்டனம்

Spread the love
கோயமுத்தூர் பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்த திருநங்கை செயற்பாட்டாளர் கல்கி சுப்பிரமணியம், மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய சட்டத் திருத்த மசோதா திருநங்கை மற்றும் திருநர் சமூகத்தின் அடையாளத்தையும் உரிமைகளையும் பாதிக்கும் வகையில் உள்ளதாக குற்றம்சாட்டினார்.

2019ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட Transgender Persons (Protection of Rights) Act, 2019 சட்டம் திருநங்கை சமூகத்தினரின் பாதுகாப்பிற்காக உருவாக்கப்பட்டதாக கூறப்பட்டாலும், அதில் குறிப்பிடப்பட்ட இடஒதுக்கீடு, வீடு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்கள் நடைமுறையில் அமல்படுத்தப்படவில்லை என்று அவர் தெரிவித்தார்.

மேலும், 2014ஆம் ஆண்டு National Legal Services Authority vs Union of India வழக்கில் இந்திய உச்சநீதிமன்றம் வழங்கிய வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பு திருநங்கை சமூகத்திற்கு சுய அடையாள உரிமை, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் சட்டப் பாதுகாப்பு போன்ற அடிப்படை உரிமைகளை உறுதி செய்தது. ஆனால் அவற்றில் பல இன்னும் முழுமையாக செயல்படுத்தப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில், மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சரால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டத் திருத்த மசோதா, திருநங்கை சமூகத்தின் அடையாளத்தையே கேள்விக்குறியாக்குவதாக கல்கி சுப்பிரமணியம் விமர்சித்தார்.

திருநங்கை ஒருவர் தனது பாலின அடையாளத்தை மாற்ற அரசு சான்றிதழ் பெறுவதற்கு மருத்துவ பரிசோதனை அவசியம் என விதிக்கப்பட்டிருப்பது மனித மரியாதைக்கு எதிரானது என்றும், இது பாகுபாட்டை ஏற்படுத்தும் நடைமுறை என்றும் அவர் தெரிவித்தார். “ஆண் அல்லது பெண் என தங்களை அடையாளப்படுத்திக் கொள்பவர்களுக்கு இத்தகைய பரிசோதனை தேவையில்லை; ஆனால் திருநங்கைகளுக்கு மட்டும் இத்தகைய நிபந்தனை விதிப்பது சமத்துவத்திற்கு எதிரானது,” எனக் கூறினார்.

மேலும், இந்த மசோதா கல்வி, வேலைவாய்ப்பு, வீடு, இடஒதுக்கீடு போன்ற அடிப்படை உரிமைகள் குறித்து தெளிவான திட்டங்களை வழங்காமல், தண்டனைகள் மீது அதிக கவனம் செலுத்துகிறது என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

திருநங்கைகளை கடத்தி கட்டாய பிச்சை எடுக்கவைத்தல் அல்லது பாலியல் தொழிலில் ஈடுபடுத்துதல் போன்ற குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஆனால் திருநங்கைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகளுக்கு மிகக் குறைந்த தண்டனை மட்டுமே வழங்கப்படுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், மசோதாவில் “திருநங்கை” என்ற மரியாதையான தமிழ்ச்சொல்லுக்கு பதிலாக “அரவாணி” என்ற சொல்லைப் பயன்படுத்தியிருப்பதையும் அவர் எதிர்த்தார். “திருநங்கை என்பது மத சார்பற்ற, மரியாதையான அடையாளம்; அதையே அதிகாரப்பூர்வமாக பயன்படுத்த வேண்டும்,” என வலியுறுத்தினார்.

தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களின் திருநங்கை பிரதிநிதிகள் மத்திய அமைச்சகத்தால் நியமிக்கப்பட்டிருந்தாலும், இந்த சட்டத் திருத்தம் குறித்து அவர்களிடம் எந்த ஆலோசனையும் நடத்தப்படவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார்.

இந்த சட்டத் திருத்தத்திற்கு எதிராக டெல்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருவதாகவும், தமிழகத்திலும் விரைவில் போராட்டங்கள் தீவிரமடையும் என்றும் அவர் தெரிவித்தார்.

“இந்த சட்டத் திருத்தம் எங்கள் சுயமரியாதையை காயப்படுத்துகிறது; இதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்,” என மத்திய அரசை அவர் வலியுறுத்தினார்.