ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘தமிழ்மணம்’ 3 நாள் கருத்தரங்கு திருச்சி சிவா எம்.பி., தமிழருவி மணியன் பங்கேற்பு

Spread the love

கோவை கிக்கானி மேல்நிலைப்பள்ளி அரங்கில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ‘தமிழ்மணம்’ என்ற பெயரில் தமிழ் இலக்கியம் பேசும் அறிவரங்கம் நடைபெற்றது.

இதில், ‘திருக்குறள்’ என்ற தலைப்பில் திமுக மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பேசினார். அவர் கூறியதாவது:

“தமிழ் என்பது நமது மொழி மட்டுமல்ல; நமது பெருமையும் அடையாளமும் ஆகும். ஒவ்வொரு நாட்டிலும் அந்தந்த மொழி அடையாளமாக உள்ளது. அயர்லாந்தில் ஐரிஷ், ஜப்பானில் ஜப்பானீஸ், சீனாவில் சீன மொழி என மொழி அடையாளம் பெற்றுள்ளது. ஆனால் தமிழ்நாடு மொழியின் பெயரால் அடையாளம் காணப்படுகிறது.

சீனன், ஜெர்மானியன் என்று சொல்வதைப் போல நம்மை தமிழன் என்கிறார்கள். நாம் மொழிவழி இனமாக இருக்கிறோம். உலகின் மூத்த மொழிகளில் ஒன்றான தமிழ், இன்றும் அழியாமல் பேசப்படும் மொழியாக உள்ளது. உலகில் ஆயிரக்கணக்கான மொழிகள் தோன்றி மறைந்துள்ள நிலையில், தமிழ் தொடர்ந்து நிலைத்து வருகிறது.

தமிழ்த்தாய் வாழ்த்து, தேசிய கீதம் ஆகியவை ஒலிப்பதிவு மூலம் மட்டுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து வாய்மொழியாகப் பாடப்பட வேண்டும். திருக்குறளில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்து தரப்பினருக்கும் பொருந்தக்கூடியவை. மதம் உள்ளிட்ட எந்த ஒரு சார்பையும் சார்ந்த நூலாக இல்லாமல், எதையும் சாராத மனிதர்களுக்காக எழுதப்பட்ட நூலாக திருக்குறள் விளங்குகிறது” என்றார்.

கம்பராமாயணம் குறித்து தமிழருவி மணியன் பேசுகையில், “கம்பர் பல்வேறு திறமைகளைக் கொண்டவர். வால்மீகி எழுதிய ராமாயணத்தை தமிழில் படைக்க வேண்டும் என்ற விருப்பம் அவருக்கு இருந்தது. மன்னர் குலோத்துங்கன், சடையப்ப வள்ளல் ஆகியோருக்கு நன்றிக்கடனாக கம்பராமாயணம் படைக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

கம்பர் எல்லையற்ற கற்பனை ஆற்றல் கொண்டவர். தமிழக மக்களின் விருப்பத்திற்காக அவர் ராமாயணத்தைப் படைத்தார். கம்பராமாயணத்தில் திருக்குறளின் கருத்துகள் பல இடங்களில் இடம்பெற்றுள்ளன. புலனடக்கம் இல்லாவிட்டால் எந்தச் சாதனையும் செய்ய முடியாது. ஐம்புலன்களை அடக்கி வைப்பதன் அடிப்படையில்தான் நமது வாழ்க்கை அமைகிறது” என்றார்.

நிகழ்ச்சியில் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனர் கிருஷ்ணன், பேச்சாளர் மரபின் மைந்தன் முத்தையா, சிவசக்தி வடிவேல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

‘தமிழ்மணம்’ கருத்தரங்கின் இரண்டாம் நாளில் சிலப்பதிகாரம் மற்றும் வில்லிபாரதம் குறித்து சிறப்பு சொற்பொழிவுகள் நடைபெறுகின்றன. இதில் சிலப்பதிகாரம் குறித்து நாஞ்சில் சம்பத்தும், வில்லிபாரதம் குறித்து பழ.கருப்பையாவும் பேசுகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *