போதையில்லா கோவையை உருவாக்க வலியுறுத்தி, வி.ஜி.எம். இரைப்பை, குடல், எலும்பு மற்றும் பல்துறை சிறப்பு மருத்துவமனை, கோவை தடகளக் கழகம் சார்பில் நடைபெற்ற விழிப்புணர்வு ஓட்டத்தில் 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

கோவை நேரு விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இந்த விழிப்புணர்வு ஓட்டம், தொடர்ந்து 3-ஆவது ஆண்டாக நடத்தப்பட்டது. இதில் 4,750 ஓட்டப்பந்தய வீரர்கள் உள்பட நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், விளையாட்டுக் கழகங்கள், தன்னார்வலர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என 5,000-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
போதைப ்பொருள்களுக்கு ‘வேண்டாம்’ எனக் கூறுவதுடன், முழங்கால் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பது என்ற இரட்டை நோக்கங்களுடன் இந்த விழிப்புணர்வு ஓட்டம் நடைபெற்றது. இதன் மூலம் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் முழங்கால் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் 7,000-க்கும் மேற்பட்டோர் போதைப்பொருள் ஒழிப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வி. சம்பத்குமார் கொடியசைத்து விழிப்புணர்வு ஓட்டத்தைத் தொடக்கி வைத்தார்.
பல்வேறு வயது மற்றும் பிரிவுகளில் வெற்றி பெற்றவர்களுக்கு ரூ.2 லட்சத்துக்கும் அதிகமான ரொக்கப் பரிசுகள் வழங்கப்பட்டன. மாநகராட்சிப் பள்ளி மாணவர்களுக்கு இலவசப் பதிவு, விளையாட்டு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட சமூக நலத் திட்டங்களுக்கு இந்த ஓட்டத்தின் மூலம் திரட்டப்பட்ட நிதி பயன்படுத்தப்பட உள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
நிகழ்ச்சியில் மருத்துவமனைத் தலைவர் மருத்துவர் வி.ஜி. மோகன் பிரசாத், மருத்துவ இயக்குநர் மருத்துவர் சுமன், கோவை தடகளக் கழகச் செயலாளர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



Leave a Reply