முயல் வேட்டைக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடி: கடித்த காளை மாட்டின் வாய் சிதைந்தது

Spread the love
மதுக்கரை அருகே முயல் வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியை காளை மாடு கடித்ததில் அதன் வாய் சிதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுக்கரை வனச்சரகத்துக்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் காளை மாடு ஒன்று வாயில் பலத்த காயங்களுடன் தனியார் நிலத்தில் நிற்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து வனச்சரகர் அருண்குமார் தலைமையிலான வனத்துறையினர் அங்கு சென்று ஆய்வு செய்தனர். அப்போது, நாட்டு வெடியை கடித்ததில் மாட்டின் வாயில் காயம் ஏற்பட்டது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அப்பகுதியில் நாட்டு வெடிகள் ஏதேனும் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என வனத்துறையினர் சோதனை நடத்தினர். அப்போது அருகிலுள்ள தோட்டத்தில் பணியாற்றி வந்த ராயப்பன் என்பவரின் கொட்டகையில் முயல் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் வலைகள் மற்றும் பிளாஸ்டிக் டப்பாவில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 5 நாட்டு வெடிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

இதுகுறித்து பேரூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் ராயப்பனை விசாரணைக்காக அழைத்துச் சென்று, வெடிமருந்துகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

வனத்தை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்த வனத்துறையினர், வனவிலங்குகளை வேட்டையாட நாட்டு வெடிகளை பயன்படுத்துவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *