வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க மாட்டோம் எடப்பாடி பழனிசாமிக்கு வேலுமணி, நத்தம் விஸ்வநாதன் மீண்டும் கடிதம்

Spread the love

அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் நடைபெற உள்ள கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு முழு ஆதரவு தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, நத்தம் விஸ்வநாதன், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பிற மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்க முடியாது என தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அவர்கள் இருவரும் இன்று (ஆக.13) மீண்டும் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.

அதில், கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு தேர்தல் வாக்குறுதியின்படி விவசாயிகளின் பயிர்க்கடனை முழுமையாக ரத்து செய்யாமல் விதிமுறைகளை விதித்துள்ளதைக் கண்டித்தும் அதிமுக சார்பில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டங்களுக்கு தங்களது முழு ஆதரவு உண்டு என குறிப்பிட்டுள்ளனர்.

அதேநேரத்தில், தங்களது சொந்த மாவட்டங்களில் ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை ஏற்க வாய்ப்பு வழங்காமல், வேறு மாவட்டங்களுக்கு நியமித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என அவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, நத்தம் விஸ்வநாதனுக்கு ராமநாதபுரம் மாவட்டமும், எஸ்.பி.வேலுமணிக்கு தேனி மாவட்டமும் ஒதுக்கப்பட்டுள்ளதை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், கருத்து வேறுபாடு காரணமாக கட்சிப் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே வகித்த மாநில மற்றும் மாவட்டப் பொறுப்புகள் மீண்டும் வழங்கப்படும் என எடப்பாடி பழனிசாமி உறுதியளித்திருந்ததாகவும், ஆனால் இதுவரை அந்தப் பொறுப்புகள் வழங்கப்படவில்லை என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகளை புறக்கணிக்கும் வகையில் கட்சிப் பொறுப்புகள் மற்றும் ஆர்ப்பாட்டப் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அவர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.

மேலும், 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகளுக்கு கூட்டுறவு வங்கிகளில் பெற்ற ரூ.75 ஆயிரம் வரையிலான பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும், அதற்கு மேல் கடன் பெற்றவர்களுக்கு குறிப்பிட்ட அளவு மட்டுமே தள்ளுபடி செய்யப்படும் என்றும் தவெக அரசு அறிவித்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என தெரிவித்துள்ளனர். அனைத்து விவசாயிகளின் பயிர்க்கடனையும் பாகுபாடின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர்.

மேகதாது அணை விவகாரம், காவிரியில் தமிழகத்திற்குரிய நீரைப் பெறுதல் உள்ளிட்ட தமிழகத்தின் ஜீவாதார உரிமைகளை பாதுகாக்க அதிமுக மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தொடர்ந்து ஆதரவு அளிப்போம் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.

“ஆர்ப்பாட்டங்களுக்கு முழு ஆதரவு உண்டு; ஆனால் வேறு மாவட்டங்களில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களில் நேரடியாக பங்கேற்க இயலாது” என நத்தம் விஸ்வநாதன் மற்றும் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் கடிதத்தில் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *