நேபாள பெருவெள்ளத்தில் கம்பீரமாக நின்ற ஒரே வீடு!

Spread the love
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சுற்றியிருந்த கட்டடங்கள் அனைத்தும் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், ஒரு மாடி வீடு மட்டும் எந்தவித சேதமுமின்றி கம்பீரமாக நின்ற காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன.

நேபாளத்தின் நுவாகோட் மாவட்டத்தில் ஆற்றில் ஏற்பட்ட கடும் வெள்ளப்பெருக்கால் பல வீடுகள், கட்டடங்கள் மற்றும் பாலங்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளத்தின் வேகம் மற்றும் நீரின் அழுத்தம் காரணமாக பல கான்கிரீட் கட்டடங்களும் இடிந்து விழுந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், வெள்ளத்தால் சூழப்பட்ட பகுதியில் ஒரு மாடி வீடு மட்டும் உறுதியாக நின்றுள்ளது. அந்த வீட்டில் வசித்து வந்த குடும்பத்தினரும் உயிர் தப்பியுள்ளனர். அவர்கள் வீட்டின் பால்கனியில் நின்று வெள்ளத்தின் பாதிப்புகளை அதிர்ச்சியுடன் பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் அடங்கிய விடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

சுற்றியிருந்த கட்டடங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட நிலையில், அந்த வீடு மட்டும் தாக்குப்பிடித்ததற்கு அதன் கட்டுமானத் தரமே காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நீரின் அழுத்தத்தைத் தாங்கும் வகையில் கட்டுமானம் மேற்கொள்ளப்பட்டிருப்பதும், தரமான கட்டுமானப் பொருள்கள் பயன்படுத்தப்பட்டிருப்பதும் இதற்குக் காரணமாக இருக்கலாம் என இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வீட்டின் கட்டுமானத்தை பாராட்டி வரும் பலரும், இதை வடிவமைத்து கட்டிய பொறியாளருக்கும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, அந்த விடியோ உலக அளவில் கவனம் பெற்று வருகிறது.