திமுக, அதிமுகவில் ஆளே இல்லாத நிலை ஏற்படும்: அமைச்சர் நிர்மல் குமார்

Spread the love
தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளிலும் ஒரு சிலரைத் தவிர ஆளே இல்லாத நிலை உருவாகும் என்றும், மக்கள் அந்தக் கட்சிகளைப் புறக்கணித்து வருவதாகவும் சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

கோவை அரசு சட்டக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற மூன்றாவது பட்டமளிப்பு விழாவில் அமைச்சர் நிர்மல் குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டப் படிப்பை நிறைவு செய்த மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.

இந்த விழாவில், கோவை அரசு சட்டக் கல்லூரியின் முன்னாள் மாணவியும், உச்சநீதிமன்ற நீதிபதியுமான நீதியரசர் மோகனா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். மேலும், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை முன்னாள் நீதிபதி பாரதிதாசனும் விழாவில் பங்கேற்றார்.

பட்டமளிப்பு விழாவுக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல் குமார், முதல்வர் விஜயின் கரூர் பயணம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்தார். அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்ற அவர், கரூர் பயணம் தொடர்பாக திமுக மற்றும் அதிமுக தாக்கல் செய்த மனுக்கள் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகவும், முதல்வரின் பயணத்தைக் கண்டு எதிர்க்கட்சிகள் ஏன் அச்சமடைகின்றன என்பது புரியவில்லை என்றும் கூறினார்.

கரூர் பயணத்தைத் தடுக்க முயற்சிப்பவர்கள், தங்களது ஆட்சிக்காலத்தில் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தடை கோரியதை மக்கள் மறக்கவில்லை என்றும் அவர் விமர்சித்தார். கரூர் சம்பவத்தை அரசியல் ஆதாயத்திற்காக பயன்படுத்த முயன்றதாகவும், தற்போது முதல் தகவல் அறிக்கையை முழுமையாகப் படிக்காமலேயே உச்சநீதிமன்றத்தின் நேரத்தை வீணடித்துள்ளதாகவும் குற்றம்சாட்டினார்.

தற்போதைய அரசு மக்கள் நலப் பணிகளை முழு வீச்சில் செயல்படுத்தி வருவதாகத் தெரிவித்த அவர், திமுகவும் அதிமுகவும் ஆட்சியைப் பிடிக்க மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியடைந்துள்ளதாகக் கூறினார்.

“தமிழகத்தில் திமுகவும் அதிமுகவும் நாளுக்கு நாள் தேய்ந்து வருகின்றன. இன்னும் சில மாதங்களில் 10 முதல் 15 பேரைத் தவிர அந்தக் கட்சிகளில் யாரும் இருக்காத நிலை உருவாகும். தமிழக மக்கள் அந்த இரு கட்சிகளையும் தொடர்ந்து புறக்கணித்து வருகின்றனர்,” என்று அமைச்சர் நிர்மல் குமார் தெரிவித்தார்.

ஆதிதிராவிடர் நலத்துறை பெயர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த அவர், அனைத்துத் தரப்பு மக்களின் நீண்டநாள் கோரிக்கையை ஏற்றே அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *