சிறுதுளி, கோவை மாநகராட்சி மற்றும் பி.எஸ்.ஜி. குழுமம் இணைந்து காந்திமா நகர் ஓடை சீரமைப்பு

Spread the love

கோவை மாநகராட்சி, பி.எஸ்.ஜி. குழுமம் மற்றும் சிறுதுளி இணைந்து கோவையின் முக்கிய நகர்ப்புற நீர்வழித்தடங்களில் ஒன்றான காந்திமா நகர் ஓடையை (குறும்பப் பள்ளம்) புனரமைக்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. முதல் கட்டமாக 3.5 கிலோமீட்டர் நீளப்பகுதியில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இத்திட்டத்தின் கீழ் திடக்கழிவுகள் மற்றும் வண்டல் அகற்றுதல், கரைகளை வலுப்படுத்த இயற்கை மரங்கள் மற்றும் தாவரங்கள் நடுதல், இயற்கை சார்ந்த நீர் சுத்திகரிப்பு முறைகள் அமைத்தல் மற்றும் நீர்தரத்தை தொடர்ந்து கண்காணித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப் படுகின்றன.
இந்தத் திட்டம் மூலம் நீரின் தரம் மேம்படுதல், துர்நாற்றம் குறைதல், திடக்கழிவு கொட்டுதல் தடுக்கப்படுதல் மற்றும் நகரின் பசுமை வளம் அதிகரித்தல் உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் புனரமைப்பு முயற்சியின் ஒரு பகுதியாக “உங்கள் கழிவைக் கவனியுங்கள்” என்ற பொதுமக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சிங்காநல்லூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ். கிரி பிரசாத், கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா, பி.எஸ்.ஜி. சன்ஸ் & சாரிட்டீஸ் நிர்வாக அறங்காவலர் எல். கோபாலகிருஷ்ணன், சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், சிறுதுளி அறங்காவலர்கள், ஸ்டீயரிங் கமிட்டி மற்றும் அபெக்ஸ் கமிட்டி உறுப்பினர்கள், மாநகராட்சி அதிகாரிகள், தன்னார்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு ஓடை சுத்தம் செய்யும் பணியிலும் பங்கேற்றனர்.
நிகழ்ச்சியில் பேசிய சிறுதுளி நிர்வாக அறங்காவலர் வனிதா மோகன், நகரின் ஓடைகள் மற்றும் நீர்நிலைகளை பாதுகாக்க பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள், தொழில் நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டுமென அழைப்பு விடுத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *