கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது, எடப்பாடி பழனிசாமியின் அரசியல் செயல்பாடுகள் குறித்துப் பேசிய அவர், “முன்னாள் காலத்தையும், ஞானத்தையும் எதிர்த்துப் போராட முடியும். ஆனால், காலத்தை எதிர்த்துப் போராட முடியாது. காலம் வைக்கின்ற புள்ளியை யாராலும் அழிக்க இயலாது. இதுதான் தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு நடைபெற்று வருகிறது. ஒவ்வொருவராகத் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி கட்சியிலிருந்து வெளியேற்றி வருகிறார். மன்னிக்கும் தன்மையும், பெருந்தன்மையும் இல்லாத எந்தத் தலைமையும் நீடித்து நிலைத்த வரலாறு இல்லை. அந்த நிலை எடப்பாடி பழனிசாமிக்கும் ஏற்படும்” என்றார்.
பொள்ளாச்சியில் நடைபெற்ற திருமண விழாவில் எஸ்.பி. வேலுமணியுடன் பேசியது குறித்த கேள்விக்கு, “உறவுமுறை அடிப்படையிலான திருமணம் என்பதால் நானும் சென்றிருந்தேன். வேலுமணியும் வந்திருந்தார். கட்சி நிர்வாகிகளும் அங்கு இருந்தனர். இருவரும் வணக்கம் தெரிவித்துக் கொண்டு சிறிது நேரம் அமர்ந்து பேசினோம். அரசியல் குறித்து எதுவும் பேசவில்லை. திமுகவுடன் இணைந்து ஜாக்பாட் அடிக்க முயன்றவர் யார், அதில் தோல்வியடைந்தவர் யார் என்பது நாட்டுக்கே தெரியும்” என்றார்.
அனிருத் திருமண விழாவில் எடப்பாடி பழனிசாமி, முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தது குறித்த கேள்விக்கு, “எடப்பாடி பழனிசாமி பல்வேறு நிலைகளில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்று துடிக்கிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா வழியில் வந்த இயக்கம் தற்போது எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதுதான் மக்களின் கேள்வி. நூற்றுக்கணக்கானவர்களை நீக்கும் அதிகாரம் இருப்பதாகக் கூறும் அவர், அனைவராலும் உருவாக்கப்பட்ட பொதுச்செயலாளர் என்பதை மறந்துவிடுகிறார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா என்பது வேறு; எடப்பாடி பழனிசாமி என்பது வேறு” என்றார்.
இரண்டு கோடித் தொண்டர்களில் ஒருவர்தான் வேலுமணி என எடப்பாடி பழனிசாமி கூறியது குறித்த கேள்விக்கு, “வேலுமணி கட்சியின் முக்கியப் பொறுப்பாளராக இருந்தவர். அவரைப் பொதுச்செயலாளராகவும், முதலமைச்சராகவும் ஆக்குவதற்கு உறுதுணையாக இருந்தவர். யாரையும் யாராலும் குறைத்து மதிப்பிட முடியாது. இதற்குக் காலம் பதில் சொல்லும்” எனத் தெரிவித்தார்.
மேலும், “கொங்கு மண்டலம் தற்போது யாரிடம் இருக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். வெற்றித் தளபதி விஜய் தலைமையில்தான் கொங்கு மண்டலம் உள்ளது. தனித்துப் போட்டியிட்டு 25 சட்டமன்ற உறுப்பினர்களைப் பெற்ற பெருமை எங்களுக்கு இருக்கிறது. எதிர்காலத்தில் கொங்கு மண்டலம் விஜய் தலைமையில்தான் பவனி வரும். எடப்பாடி போன்றவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்று தேடிப் பார்க்க வேண்டிய நிலை ஏற்படும்” என்றார்.



Leave a Reply