கோவை: தமிழகத்தில் ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்களிலேயே சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், தற்போதைய அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழகத்தில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றங்கள் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக குற்றம்சாட்டினார். பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபடும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்ப வேண்டும் என்றும், அந்தந்த துறைகளுக்கான கேள்விகளுக்கு சம்பந்தப்பட்ட அமைச்சர்களே பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
தமிழக அரசின் கடன் தொடர்ந்து அதிகரித்து வருவதாகக் கூறிய எடப்பாடி பழனிசாமி, தற்போதைய ஆட்சி 5 ஆண்டுகள் நீடித்தால் கடன் ரூ.10 லட்சம் கோடி வரை அதிகரிக்கும் நிலை ஏற்படலாம் என தெரிவித்தார். மின்சாரத் துறையின் கடன் மற்றும் புதிய மின் திட்டங்கள் குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார்.
போக்குவரத்துத் துறையில் பழைய பேருந்துகளை தொடர்ந்து இயக்குவதற்கு பதிலாக புதிய பேருந்துகளை வாங்க வேண்டும் என்றும் அவர் கூறினார். மேலும், தமிழகத்தில் பல்வேறு துறைகளில் ஊழல் நடைபெற்று வருவதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை சோதனைகளில் பணம் பறிமுதல் செய்யப்படுவதாகவும் குற்றம்சாட்டினார்.
அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக வெற்றிக் கழக அரசு 5 ஆண்டுகள் நிலைக்காது என்பது அதன் செயல்பாடுகளைப் பார்த்தாலே தெரிகிறது என்று குறிப்பிட்ட அவர், சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, அதிகரிக்கும் கடன் மற்றும் வருவாயைப் பெருக்குவதற்கான திட்டங்கள் இல்லாமை ஆகியவற்றை இதற்கு காரணங்களாக சுட்டிக்காட்டினார்.
அதிமுகவில் இருந்து மேலும் சில சட்டமன்ற உறுப்பினர்கள் தமிழக வெற்றிக் கழகத்துக்கு செல்ல உள்ளதாக வெளியான தகவல் குறித்தும் அவர் பதிலளித்தார். இந்திய கூட்டணியில் அதிமுக தொடர்ந்து இருப்பதாகவும், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக பின்னர் முடிவு எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.



Leave a Reply