இது ரியல் ஆட்சி, ரீல்ஸ் ஆட்சி – செந்தில் பாலாஜி தாக்கு…..

Spread the love

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதி அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

நிகழ்வில் கோவை நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார், மாநகர மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், திமுக சொத்து பாதுகாப்புக் குழு துணைத் தலைவர் பொங்கலூர் பழனிச்சாமி, தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் உள்ளிட்டோர் மற்றும் திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, புதிய அலுவலகம் மக்கள் குறைதீர் மையமாக செயல்படும் என்றும், இன்று முதல் பொதுமக்களின் கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு அவற்றுக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார். வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சிகள் நிறைவடைந்த நிலையில், இனி ஒவ்வொரு வார்டாக சென்று மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

ஆளும் கட்சியாக இல்லாவிட்டாலும் மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியும் என்ற நம்பிக்கை தங்களுக்கு இருப்பதாகக் கூறிய அவர், திமுக ஆட்சிக் காலத்தில் கோவை மாநகராட்சிக்காக சாலை, குடிநீர் மற்றும் பாதாள சாக்கடை உள்ளிட்ட திட்டங்களுக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக குறிப்பிட்டார்.

மின்சாரத் துறையில் ஹார்ட் டிஸ்க் மாயமானது மற்றும் அமைச்சர் கூறிய மிரட்டல் குற்றச்சாட்டு குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், “ஒரு அமைச்சரையே மிரட்ட முடிகிறதெனில் மாநிலத்தின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து மக்கள் சிந்திக்க வேண்டும்” என்றார். தமிழகம் முழுவதும் மின்வெட்டு பிரச்சினை காரணமாக மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதாகவும், அதனைத் தீர்க்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

தமிழக வெற்றி கழக அரசை விமர்சித்த அவர், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றத் தவறியதால் மக்கள் அதிருப்தியில் இருப்பதாகக் கூறினார். “இது ரியல் ஆட்சி அல்ல, ரீல்ஸ் ஆட்சி” என்று விமர்சித்த அவர், தற்போதைய ஆட்சியில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் குற்றம்சாட்டினார்.

சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளுக்கு கால அவகாசம் கேட்க முடியாது என்றும், அரசின் முதன்மை பொறுப்பு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதே என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

மேலும், “திமுகவை அழிக்க நினைத்தவர்கள் தான் அரசியலில் காணாமல் போயுள்ளனர்; திமுக ஒரு ஆலமரம் போன்ற இயக்கம்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தொகுதி மக்களின் கோரிக்கைகளை முன்னிறுத்தி தேவையெனில் முதல்வரை சந்தித்து வலியுறுத்துவோம் என்றும், தமிழக வெற்றி கழக அரசின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் தொடர்ந்து சுட்டிக்காட்டுவோம் என்றும் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *