இடுக்கு பிள்ளையார் கோவிலில் பக்தர் பலி… ஆந்திர குடும்பத்தினருக்கு நடந்த சோகம்

Spread the love

திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இடுக்கு பிள்ளையார் கோவில் அமைந்துள்ளது. இது, பரம்பரை கோயில் ஆகும். இந்த கோவிலில் சிறிய குகை போன்ற அமைப்பில் 3 வாசல்கள் உள்ளன. பின் வாசல் வழியாக ஒருக்களித்து படுத்தபடி, உள்ளே நுழைந்து, மெல்லமாக கைகளை ஊன்றியவாறு நகர்ந்து முன் வாசல் வழியாக வெளியே வரவேண்டும். கிரிவல நேரத்தில் இடுக்கு பிள்ளையார் கோயிலில் 4,5 மணி நேரம் காத்திருந்து வழிபட்டு செல்வார்கள்.
இடுக்கில் நுழைந்து பக்தர் வெளியே வந்த உடன் நந்தி இருக்கும். பக்தர்கள் நந்தி பகவானையும், இடுக்கு பிள்ளையாரையும் வணங்கி செல்வது வாடிக்கை . இந்தக் கோயிலில் உள்நுழைந்து வந்தால் பில்லி சூனியம் அகலும், உடல் வலி, பிற நோய்கள் தீரும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.மேலும் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என புதிதாக திருமணம் ஆன தம்பதிகள் இந்தக்கோயிலுக்குள் நுழைந்து வருகின்றனர்.
நேற்று இரவு ஆந்திராவை சேர்ந்த மணிக்குமார் (வயது 36) என்பவர் தனது குடும்பத்துடன் கிரிவலம் சென்றார். சுமார் 11 மணியளவில் இடுக்கு பிள்ளையார் கோவிலுக்கு சென்ற மணி குமார் குகை வடிவத்தில் உள்ள கோவில் பகுதியில் படுத்தபடி நுழைந்தார். உடல் பருமன் அதிகம் என்பதால் குகையில் இருந்து வெளியே வர முடியாமல் தவித்தார். மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதனை கண்ட, சக பக்தர்கள் மயங்கி கிடந்தவரை போராடி வெளியே கொண்டு வந்தனர்.
பின்னர், 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் மணிக்குமார் வழியிலே இறந்துவிட்டதாக கூறினர். இதை கேட்ட மணிக்குமார் குடும்பத்தினர் கதறி அழுதனர். இதுகுறித்து திருவண்ணாமலை தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உடல் பருமன் மற்றும் சுவாச பிரச்சனை உள்ள பக்தர்கள் இடுக்கு பிள்ளையார் கோவிலில் உள்ள குகை போன்ற பகுதியில் புகுந்து செல்லக் கூடாது என்று போலீசார் எச்சரித்துள்ளனர்.