கோவை: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தின் முன்பு, இருகூர் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இருகூர் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி, ஆட்டோ ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். இவர் இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த நிலையில், திடீரென தனது உடலில் மண்ணெண்ணெயை ஊற்றி தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இதைக் கவனித்த அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர், உடனடியாக அவரைத் தடுத்து நிறுத்தி மீட்டனர்.
அப்போது பெரியசாமி, தன்னை பஞ்சாயத்து தலைவர் உள்ளிட்ட சிலர் தாக்கி துன்புறுத்தியதாகவும், இதுகுறித்து புகார் அளித்தும் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும், மாநில மனித உரிமை ஆணையம் வரை சென்று முறையிட்டும் தனக்கு நீதி கிடைக்கவில்லை எனக் கூறி கண்ணீர் மல்க வேதனையை வெளிப்படுத்தினார்.
இதையடுத்து காவல்துறையினர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி, புகாரை மனுவாக அளிக்குமாறும், உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தனர். பின்னர் விசாரணைக்காக அவரை ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.
பெரியசாமி அளித்துள்ள புகார் மற்றும் அவர் தெரிவித்த குற்றச்சாட்டுகள் குறித்து ரேஸ்கோர்ஸ் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்தால் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று காலை சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.



Leave a Reply