கிருஷ்ணர் பிறந்த தினமான இன்று, நாடு முழுவதும் கிருஷ்ண ஜெயந்தி மற்றும் கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா பக்தி உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக, கோவை கொடிசியா அருகே உள்ள இஸ்கான் ஜெகந்நாதர் ஆலயத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. அதிகாலை முதலே சிறப்பு ஆராதனைகள், அகண்ட நாம சங்கீர்த்தனம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
பக்தர்கள் “ஹரே ராமா… ஹரே கிருஷ்ணா…” என பக்தி முழக்கங்களை எழுப்பியபடி கிருஷ்ண நாமங்களைப் பாடி சுவாமி தரிசனம் செய்தனர். பலராமர், சுபத்ரா தேவி மற்றும் கிருஷ்ணர் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். பலர் தங்களது குழந்தைகளுக்கு கிருஷ்ணர், ராதை வேடமிட்டு அழைத்து வந்து சுவாமி தரிசனம் செய்தனர். இதனால் கோவில் வளாகம் முழுவதும் பக்தி பரவசத்துடன் காணப்பட்டது.
தொடர்ந்து இன்று மாலை கலச அபிஷேகம் மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. விழாவில் பங்கேற்கும் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்படுகிறது.



Leave a Reply