திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றலாம் எனச் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை வழங்கிய தீர்ப்பை தமிழக அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் என வலியுறுத்தி, கோவையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்தில் அதன் மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி. சுப்பிரமணியம் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது:
கடந்த திமுக ஆட்சியில் நீதிமன்ற உத்தரவு அமல்படுத்தப்படாததால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைகள் ஏற்பட்டதாகவும், உயர் அதிகாரிகள் நீதிமன்றத்தில் மன்னிப்பு கோர வேண்டிய சூழல் உருவானதாகவும் தெரிவித்தார்.
மேலும், தற்போது ஆட்சியில் உள்ள அரசு முந்தைய அரசின் நடவடிக்கைகளை மாற்றியமைத்து வரும் நிலையில், திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் மட்டும் நீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்தாமல் இருக்கக் கூடாது எனக் கூறினார்.
தமிழக அரசு இதனை அமல்படுத்தத் தவறும் பட்சத்தில், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றக் கோரி, வரும் 18-ஆம் தேதி திருப்பரங்குன்றத்தில் ஆன்மிகப் பெரியவர்கள் மற்றும் முருக பக்தர்கள் பங்கேற்கும் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகத் தெரிவித்தார். மேலும், வரும் 24-ஆம் தேதி கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு தீப ஜோதியைக் காணப் பொதுமக்கள் அழைக்கப்பட உள்ளதாகவும் கூறினார்.
தீபம் ஏற்றுவதற்கான கல்வெட்டு உள்ளிட்ட ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகவும், திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள இடங்கள் கோவிலுக்குச் சொந்தமானது என 1920-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.



Leave a Reply