பசும்பொன் தேவர் பெருமகனாருக்குத் தங்கக் கவசம் வழங்கிப் பெருமை சேர்த்தவர் புரட்சித்தலைவி அம்மா! – கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி புகழாரம்!

Spread the love

சுதந்திரப் போராட்ட தியாகியும், ஆன்மீக மற்றும் அரசியல் வழிகாட்டியுமான பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யாவின் 119-வது ஜெயந்தி விழா மற்றும் 64-வது குருபூஜை விழாவை முன்னிட்டு, கோவை சுந்தராபுரத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு அதிமுக தொண்டர் உரிமை மீட்புக் குழுவின் நிர்வாகியும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கோவை சுந்தராபுரம் பகுதியில் தேவர் பேரவை சார்பில் அமைக்கப்பட்டிருந்த முத்துராமலிங்க தேவர் அய்யாவின் திருவுருவச் சிலைக்கு எஸ்.பி.வேலுமணி மலர் தூவி, மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அதிமுக முக்கிய நிர்வாகிகளும், ஆயிரக்கணக்கான தொண்டர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

இதனைத் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி: “பசும்பொன் முத்துராமலிங்க தேவர் அய்யா அவர்கள் நமது நாட்டின் மிக முக்கிய சுதந்திரப் போராட்ட தியாகி; அரசியல் மற்றும் சமூக நல்லிணக்கத்திற்குப் மிகப்பெரிய வழிகாட்டியாகத் திகழ்ந்தவர்.

புரட்சித்தலைவி அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில், தேவர் அய்யாவின் நினைவைப் போற்றும் வகையில் பசும்பொன் பொன்சிலைக்குத் தங்கக் கவசம் வழங்கிப் பெருமை சேர்த்தது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் ஆகும். அம்மா அவர்களின் வழியில், தேவர் அய்யாவின் புகழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை அதிமுக என்றும் முன்னின்று தொடரும். இந்தச் சிறப்பான விழாவை ஏற்பாடு செய்த தேவர் பேரவை பொறுப்பாளர்களுக்கும், கலந்துகொண்ட சமுதாய மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்,” என்று பேசினார்.