இந்தியா – துபாய் சர்வதேச கராத்தே மற்றும் சிலம்பப் போட்டி – 2026-ல் பங்கேற்ற கோவையைச் சேர்ந்த ஜே.கே.டி.சி. (JKTC) அணி, ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று பெருமை சேர்த்துள்ளது.
இப்போட்டியில் மிகச் சிறப்பாகச் செயல்பட்ட கோவை அணியினர், 9 தங்கம், 8 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 19 பதக்கங்களைக் குவித்து அசத்தியுள்ளனர். சர்வதேச அளவில் தங்களது திறமையையும் விடாமுயற்சியையும் வெளிப்படுத்தி வெற்றி வாகை சூடிய இம்மாணவ, மாணவிகளுக்குப் பல தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
போட்டியில் வெற்றி பெற்று கோவை திரும்பிய வீரர், வீராங்கனைகளுக்குக் கோவை விமான நிலையத்தில் சிறப்பான மற்றும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பதக்கங்களுடன் தாயகம் திரும்பிய அணியினரையும், தலைமைப் பயிற்சியாளர் சிரில் வினோத், பயிற்சியாளர்கள் கோகுலகிருஷ்ணன், சஞ்சய் ஆகியோரையும் பெற்றோர்களும் ஆதரவாளர்களும் மலர்கொத்து கொடுத்து மகிழ்ச்சியோடு வரவேற்றனர்.
இது குறித்துத் தலைமைப் பயிற்சியாளர் சிரில் வினோத் கூறுகையில், “சர்வதேசப் போட்டியில் கோவை அணியினர் ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டம் வென்றிருப்பது, இளம் தலைமுறையினரிடையே நமது பாரம்பரிய சிலம்பக் கலை மற்றும் கராத்தே மீதான ஆர்வத்தைப் பெருமளவில் அதிகரிக்கும்” என்று தெரிவித்தார்.



Leave a Reply