தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கேடு, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குப் பாதுகாப்பற்ற சூழல், மற்றும் கடுமையான விலைவாசி உயர்வு ஆகியவற்றைக் கண்டித்து, ஒருங்கிணைந்த கோவை மாவட்ட திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் கோவை செஞ்சிலுவைச் சங்கம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கோவை மாவட்ட மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி அமைப்பாளர்கள் அன்னம்மாள், கனிமொழி, ரங்கநாயகி, ஜெயலலிதா, கவிதா ஆகியோர் தலைமை தாங்கினர்.
கோவை மாவட்டச் செயலாளர்கள் துரை. செந்தமிழ்ச்செல்வன், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் எழிலரசன்/வீரமணி, தலைமைக் கழகப் பேச்சாளர் கலாவதி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

ஆர்ப்பாட்டத்தின் போது தமிழக அரசைக் கண்டித்துப் பல்வேறு கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. தொடர்ந்து திமுக மாணவரணி மாநிலச் செயலாளர் பேசுகையில்:
“தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துள்ளது. விலைவாசி உயர்வு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. தேர்தலுக்கு முன்பு பெரிய வாக்குறுதிகளைக் கொடுத்தவர்கள், தற்போது நாட்டையே சுடுகாடாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
பெண் குழந்தைகளைக் கடைக்கோ, பள்ளிக்கோ, கல்லூரிளுக்கோ பயமின்றி அனுப்ப முடியாத சூழலே நிலவுகிறது. கொலை, கொள்ளை, பாலியல் அச்சுறுத்தல்கள் அதிகரித்துவிட்டன. சிறைச்சாலைகளிலிருந்து கைதிகள் தப்பி ஓடும் அளவிற்குப் பாதுகாப்பற்ற ஆட்சியாகத் தமிழகம் மாறியுள்ளது. இந்தத் தீபாவளிக்கு மக்களுக்குக் கடுமையான விலைவாசி உயர்வையே பரிசாக வழங்கியுள்ளனர்,” என்று கடுமையாகக் குற்றம் சாட்டினார்.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்தில் கோவை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி, துணை மேயர் வெற்றிச்செல்வன், பொதுக்குழு உறுப்பினர் சரஸ்வதி, மண்டலத் தலைவர்கள் இலக்குமி இளஞ்செல்வி கார்த்திக், மீனா லோகு மற்றும் மாவட்ட நிர்வாகிகள், துணை அமைப்பாளர்கள், அணி நிர்வாகிகள் உட்படப் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.



Leave a Reply