குறிப்பிட்ட மாடல் பவர் பேங்க்கை விமானங்களில் எடுத்துச் செல்ல டி.ஜி.சி.ஏ (DGCA) கடும் தடை !

Spread the love
டெல்லியில் இருந்து சென்னை நோக்கி 180 பயணிகளுடன் வந்த விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்தபோது, திடீரென அதன் லக்கேஜ் கேபினில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. விமானம் ஐதராபாத்தில் அவசரமாகத் தரையிறக்கப்பட்ட நிலையில், இந்த விபத்திற்குக் காரணம் பயணியொருவர் கைப்பையில் வைத்திருந்த தரம் குறைந்த பவர் பேங்க் என்பது விசாரணையில் அம்பலமானது.
விமானப் பாதுகாப்புத் துறையினர் மேற்கொண்ட தீவிர விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய அந்தப் பவர் பேங்க் ‘மொபிகின்ஸ் எம்.கே.-பிபி-04′ (Mobkins MK-PB-04) மாடலைச் சேர்ந்தது என்பது கண்டறியப்பட்டது. முழுமையான பாதுகாப்புச் சான்றிதழ்கள் மற்றும் தரக்கட்டுப்பாடுகள் இல்லாத இந்த வகையான சாதனங்கள்தான் தீ விபத்திற்கு முக்கியக் காரணம் என்பதும் உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, பயணிகள் மற்றும் விமானத்தின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு, மேற்கண்ட குறிப்பிட்ட மாடல் பவர் பேங்க்கை விமானங்களில் எடுத்துச் செல்ல டி.ஜி.சி.ஏ (DGCA) கடும் தடை விதித்துள்ளது.
இந்தத் தடையின்படி, பயணிகள் தங்களது கைப்பைகளிலோ (Cabin baggage), செக்கின் பைகளிலோ (Check-in baggage) அல்லது சரக்கு விமானங்களிலோ (Cargo) இந்த வகை பவர் பேங்க்குகளை எடுத்துச் செல்ல முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது. சென்னை விமான நிலையம் உட்பட நாட்டின் அனைத்து விமான நிலையங்களிலும் இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால், பாதுகாப்பு அதிகாரிகள் பயணிகளின் உடைமைகளைத் தீவிரமாகச் சோதித்து வருகின்றனர். பயணிகள் தங்களது பயணங்களின் போது தரமான மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பவர் பேங்க்குகளை மட்டுமே பயன்படுத்துமாறு கடுமையாக அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.