கோவையில் 2-வது நாளாகத் தூய்மைப் பணியாளர்கள் வேலைநிறுத்தம்: பூசணிக்காய் வைத்து நூதன முறையில் போராட்டம்!

Spread the love
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்ட தொழிலாளர்களின் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி, மாநகராட்சி அனைத்துத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சார்பில் தொடங்கப்பட்ட தொடர் வேலைநிறுத்தப் போராட்டம் 2-வது நாளாக இன்றும் நீடித்து வருகிறது.

முக்கியக் கோரிக்கைகள்:
  • தினக்கூலி மற்றும் ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள், DBC (டெங்கு தடுப்பு) பணியாளர்கள், மலேரியா தடுப்புப் பணியாளர்கள், சாக்கடை சுத்தம் செய்யும் பணியாளர்கள், குடிநீர் விநியோகப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் மற்றும் கிளீனர்கள் என நீண்டகாலமாகப் பணிபுரியும் அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.
  • அரசு உத்தரவின்படி நாளொன்றுக்குக் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.798 வழங்கப்பட வேண்டும்.
  • DBC பணியாளர்களைத் தனியார் தன்னார்வ அமைப்பிடம் ஒப்படைக்கும் மாநகராட்சி மன்றத் தீர்மானத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
பூசணிக்காய் வைத்து நூதன போராட்டம்: போராட்டத்தின் 2-வது நாளான இன்று, மாநகராட்சி அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தூய்மைப் பணியாளர்கள் அமைதியான முறையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் அறிவிப்புகள் மற்றும் தங்களது கோரிக்கைகள் நிர்வாகத்தால் மறைக்கப்படுவதைக் கண்டிக்கும் வகையில், பூசணிக்காயை வைத்து நூதன முறையில் தங்களது எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.
மாநகராட்சி நிர்வாகம் உடனடியாகத் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை அழைத்துப் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய தீர்வு காண வேண்டும் என்றும், சுமுகத் தீர்வு எட்டப்படும் வரை போராட்டம் தொடரும் என்றும் தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட தூய்மைப் பணிகள்: இந்த வேலைநிறுத்தம் காரணமாக பெரும்பாலான தூய்மைப் பணியாளர்கள் பணிக்குச் செல்லவில்லை. மாற்றுப் பணியாளர்கள் மட்டுமே வேலையில் ஈடுபட்டுள்ளதால், கோவை மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் குப்பைகள் தேங்கி தூய்மைப் பணிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.